
கூட்டு உடன்படிக்கை நிறைவுக்கு வந்த பின்னரே 1000 ரூபா – உதய கம்மன்பில
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழில் சங்கங்களுக்கும் இடையில் 2019 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கை நிறைவுக்கு வந்த பின்னரே, தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதிகரிக்கப்பட்ட நாளாந்த 1000 ரூபா சம்பள அதிகரிப்பு எப்போது நடைமுறைக்கு வரும்? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
2019 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த கூட்டு உடன்படிக்கை இம்மாதம் நடுப்பகுதியில் நிறைவடைகின்றது. இதனை தொடர்ந்து தொழில் அமைச்சரினால் சம்பளம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில மேலும் கூறினார்.
திரிபடைந்த பிரித்தானிய புது கொரோனா வைரஸ் கொழும்பிற்குள் நுழைந்தது…
வேகமாகப் பரவக்கூடிய திரிப்படைந்த பிரித்தானிய கொரோனா வைரஸ் தொற்றுடைய நபர் கொழும்பு ஹெவலொக் சிட்டியில் அடையாளங்காணப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த முதலாம் நபர் மற்றும் இரண்டாம் நபர் குறித்து தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த வைரஸானது பியகம, அவிசாவளை மற்றும் வவுனியாவில் அடையாளம் காணப்பட்டிருந்தது. குறித்த வைரஸானது மிக வேகமாக சில வாரங்களுக்குள் முழு நாட்டிற்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை நேற்று அமைச்சரவைக்கு வரவில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (15) அமைச்சரவை கூடியபோது சமர்ப்பிக்கப்படவில்லை.
பெப்ரவரி 01 ஆம் திகதி குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் அங்கத்தவராகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. அந்நேரம் அரசாங்கம் இதுபற்றிய முடிவினை எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டப்படும் என்றது.
அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டப் பின்னர் மூன்று தடவைகள் அமைச்சரவை கூட்டடங்கள் கூட்டப்பட்டன. அதிலொன்றிலும் இந்த அறிக்கை குறித்து பேசப்படவில்லை.
நேற்று அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி அவர்கள் “ஆணைக்குழுவின் அறிக்கை நிறைய பக்கங்களைக் கொண்டுள்ளதால் அதனைப் பிரதி எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் எடுக்கும்” எனக் கூறியிருந்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன.
புதிய வைரஸிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இரண்டு முகக்கவசங்கள் அணிய வேண்டுமாம்…
வேகமாக மக்களிடம் பரவக்கூடிய கொரோனா வைரஸான பிரித்தானிய திரிபிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரப்பிரிவு பரிந்துரைத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தித்தாள் கூறுகிறது.
கொரோனா பிரித்தானிய திரிபிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக நாடுகளில் Surgical Mask அணிந்து, அதற்கு மேலாக துணியாலான முகக்கவசத்தை அணிவதாகவும், அதனை இலங்கை மக்களும் கடைபிடிக்குமாறும் சுகாதார பிரிவு கூறியுள்ளது.
மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடினால் 20 வருடங்கள் சிறை…
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மியன்மார் ராணுவம் தனது அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஷேன் வாட்ஸன், பிராவோவுக்கு பதிலாக மாற்று வீரரைச் சிந்திக்க வேண்டிய நேரம்: சிஎஸ்கே அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை
ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்ஸன், மே.இ.தீவுகள் வீரர் டுவைன் பிராவோ இருவருக்கும் பதிலாக வரும் ஐபிஎல் ஏலத்தில் மாற்று வீரரை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்
14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தங்கள் அணியிலிருந்து கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், பியூஸ் சாவ்லா ஆகியோரைக் கழற்றிவிட்டுள்ளது.
இதில் ஷேன் வாட்ஸன் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாகவும், கால் வலி காரணமாகவும் பல போட்டிகளில் பிராவோ பங்கேற்கவில்லை. மேலும், சுரேஷ் ரெய்னாவும் கடந்த முறை விளையாடாததால் சூப்பர் லீக் சுற்று செல்லாமல் முதல் முறையாக சிஎஸ்கே அணி வெளியேறியது.
இந்நிலையில் இந்த முறை சிஎஸ்கே அணியில் ரெய்னா, பிராவோ தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆனால், பிராவோ, வாட்ஸனுக்கு பதிலாக மாற்று வீரர்களைப் பற்றிச் சந்திக்க வேண்டிய நேரம் என்று கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இயலாமை ஏற்படுத்தும் ஆத்திரத்தில் அத்துமீறுவதா?
பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது கல்லூரி மாணவி தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரை ஐந்து நாள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அராஜகமும், அடக்குமுறையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைஎதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் அயர்வற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை மத்தியஅரசு ஏற்க மறுத்து அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்று தோற்றுவிட்டது. இந்தநிலையில் போராடும் விவசாயிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் மத்திய அரசின் முயற்சியும்வெற்றி பெறவில்லை. அவர்களது தேசபக்த போராட்டத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டாதன்பர்க் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததோடு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘டூல்கிட்’ என்ற செயலியையும் பகிர்ந்திருந்தார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் விவரிக்கப்பட்டிருந்தது. பெங்களூரைச்சேர்ந்த திஷா ரவி இந்த செயலியை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததுதான் ஆகப் பெரிய குற்றம் என்று தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத மத்தியஅரசு பல்வேறு வழிகளில் தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறது.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் வேளாண் மக்களின் போராட்டத்திற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராகஅரசு இந்திய அளவில் பிரபலமான சிலரை பிடித்து நிர்பந்தம் செய்து போராட்டத்திற்கு எதிரான பதிவுகளை வெளியிடச் செய்து வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றால், விவசாயிகளை ஆதரிப்பது தேசத் துரோக குற்றம் ஆகிவிடுமா?
கல்லூரியில் படிக்கும் ஒரு இளம் மாணவி மீது இவ்வளவு வன்மத்தோடு அரசு நடந்து கொள்வதும் அவருக்கு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்பு இருக்கிறது என்று அவதூறுபரப்புவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. அவரை கைது செய்தபோது குறைந்தபட்ச சட்ட நடைமுறைகள்கூட பின்பற்றப்படவில்லை. பெங்களூரு போலீசாருக்கு கூட தெரிவிக்காமல் சம்மன் இல்லாமல் அவரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளக்கூட அனுமதிக்கப்படவில்லை. மோடி அரசுக்கு எதிரான மக்களின் கோபமும்,அதிருப்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்தபட்ச மனித உரிமைகளைக் கூட பின்பற்றாமல் அரசை எதிர்ப்பவர்களை வேட்டையாட முயல்வது ஜனநாயகத்தை முற்றிலும் இழிவுபடுத்துவதாகும். திஷா ரவி கைதைக் கண்டித்து ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் வலிமையாக குரல் எழுப்ப வேண்டும்.
– தீக்கதிர்
மார்ச் மாதம் முதல் கடற்படையினரின் ஒருபகுதி சம்பளம் துண்டிக்கப்படும்…
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஊதியத்தில் குறித்த தொகை துண்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படை திகாரிகளிடம் 1500 ரூபாவும், கடற்படை சிப்பாய்களிடம் 700 ரூபாவுமே இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக பாடசாலை கல்வி வேலைத்திட்டத்திற்கு இத்தொகை ஒதுக்கப்படும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடற்படை அதிகாரிகளும், சிப்பாய்களும் “தாம் தற்போதும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். அதற்கு மேலதிகமாக பிள்ளைகளின் மேலதிக வகுப்புக்கும், online கல்விக்கும் கிடைக்கின்ற சம்பளத்திலேயே செலவழிக்கிறோம். தவிர, பிள்ளைகளின் பாடசாலை விடயங்களுக்கும் பணம் செலுத்துகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் கைகளுக்குத் துப்பாக்கி…
குரங்கு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்பு விவசாய நிலங்களில் அதிகரித்து உள்ளதால், வேளாண்மையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதிப் பாத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், 05 ஏக்கர் விவசாய நிலத்தைக் கொண்டிருத்தவர்களுக்கே துப்பாக்கி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இனிமேல் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தைக் கொண்டிருப்பவருக்கும் அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமே தெரிவித்துள்ளார்.
- « Previous Page
- 1
- …
- 584
- 585
- 586
- 587
- 588
- …
- 590
- Next Page »