அண்மையில் இடம்பெற்ற புகையிரத தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, பயணச்சீட்டுகள் வழங்கப்படாததால் இலவசமாகப் பயணிக்க வேண்டியிருந்த பயணிகள், இன்று (21) அன்று பயணித்த பயணத்திற்கான கட்டணத்தை மேலதிக பயணச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்து செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இளைஞரொருவர் இன்று இவ்வாறு மேலதிக பயணச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்து, அன்று இலவசமாகப் பயணித்த பயணத்திற்குரிய பணத்தைச் செலுத்தி அதனை முகநூலில் (Facebook) பதிவிட்டிருந்த நிலையில், தற்போது இதுவொரு புதிய அலையாக மாறியுள்ளதாகவும் அறியமுடிகிறது.
கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இடம்பெற்ற புகையிரத தொழிற்சங்க வேலைநிறுத்தம் காரணமாக மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டதால், அதற்கு தீர்வாக பயணச்சீட்டு இன்றியே புகையிரதத்தில் பயணிப்பதற்கு புகையிரதத் திணைக்களம் சந்தர்ப்பம் வழங்கியிருந்தது. இருப்பினும், இந்த இரு நாட்களிலும் அரசாங்கத்திற்கும் புகையிரதத் திணைக்களத்திற்கும் பாரிய வருமான இழப்பு ஏற்பட்டது.
அன்று பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணித்த இளைஞரொருவர் “ரடவடா துမ်රිය මගීන්ගේ නිල සමූහය 🇱🇰 RDMNS Railway Social Network” என்ற முகநூல்குழுவில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்:
“வேலைநிறுத்தம் நடைபெற்ற நாளில் இலவசமாகப் பயணித்தேன்… அதனால் இன்று இரண்டு பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டேன். ஒரு குடிமகனாக எனது பொறுப்பை மட்டுமே நிறைவேற்றினேன்”.
இதன் மூலம் விளங்குவது வெறும் சில நூறு ரூபாய் பெறுமதியான பயணச்சீட்டு பற்றிய கதை மட்டுமல்ல. இது நாட்டை கட்டியெழுப்பும் புதிய தலைமுறையின் சிந்தனை மாற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
பொதுச்சொத்து என்பது “இலவசமாகக் கிடைப்பதால் எதையும் செய்யலாம்” என்பதல்ல, மாறாக அது தங்களது சொந்தப் பொறுப்பாகக் கருதப்பட வேண்டும். மேலும், நாட்டில் ஏற்படும் முறைமை மாற்றத்திற்கு (System Change) இளம் தலைமுறையினர் உண்மையிலேயே எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
அரசாங்கமோ அல்லது ஆட்சியாளர்களோ சட்டங்களை இயற்றுவதன் மூலம் மட்டும் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்துவிட முடியாது. ஆட்சியாளர்களும் குடிமக்களும் தங்களது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றும்போதே உண்மையான மாற்றம் சாத்தியமாகும்.
ஊழலற்ற, பொறுப்புமிக்கதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டத்திற்கு, இத்தகைய இளைஞர்களின் சிந்தனை மாற்றம் பெரும் பலமாக அமையும்.










