தாம் ராஜபக்ஸ நிகாயத்தைச் சேர்ந்தவர் எனப் பகிரங்கமாக அறிவித்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சில பௌத்த பிக்குகள் திட்டமிட்ட வகையில் நீதிமன்றத்தை அவமதித்து வருவதுடன், மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கும் நேரடியாகச் சவால் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நேற்று (11) பலாங்கொட கஸ்ஸப தேரர், “மகாநாயக்க தேரர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தால், அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கும் தனக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாமல் ராஜபக்ஸவின் பிரசாரப் பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் மிலிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரும், தேசிய ஒருமைப்பாடு எனும் அமைப்பினரும் இந்தப் பிக்குவுக்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிட்டு, அவர் அரசாங்கத்தின் முகவர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.










