சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
இதன்போது, சிவராசா அனோஜன் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய அவரது பெற்றோர், தமது மகனின் விடயத்தில் விரைவாகத் தலையிட்டு அவரது உயிரைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையைக் கவனமாகக் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிவராசா அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அதிகபட்ச முயற்சி செய்து வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, இவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் இராஜதந்திர மட்டத்தில் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, சிவராசா அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்து சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகத் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருவதுடன், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இங்கு சுட்டிக்காட்டினார்.
மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
















