மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இன்று (10) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் தற்போது கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபரை இலக்கு வைத்து, “வீதியில் வைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்” என வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான குறித்த கூற்று மீதான விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஜனாதிபதி பொதுமக்களிடையே அவமதிப்புக்குள்ளாகும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










