ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஆகஸ்ட் 12ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வெற்றிகரமான கலந்துரையாடலின்போது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
இதன்போது முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி, அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதித்துறை அமைப்பின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
நீதியை நிலைநாட்டும் செயல்முறை நீதிமன்றத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணை, வழக்குத் தொடருதல் மற்றும் நீதிமன்றம் ஆகிய அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்த செயல்முறையின் பகுதிகள் என தெரிவித்தார். அதன்படி, இந்த செயல்முறையை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனித வளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு வசதியாக மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீதிமன்றங்களுக்கு தேவையான பௌதிக வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான தீர்மானம் தனிநபர் ஒருவரையோ அல்லது குழுவொன்றையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என்றும், நாட்டின் பொதுநலனை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தத் திருத்தம் ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பிலும் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விரிவான சீர்திருத்தங்களின் ஒரு பகுதி மட்டுமே என்றும், அது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்தோ அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது போன்ற விடயங்களுக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனினும், இந்தத் தீர்மானம் தொடர்பில் மேலும் பரிசீலித்து, ஒரு பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவது பொருத்தமானது என அவர்கள் முன்மொழிந்தனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய உள்ளிட்ட அதன் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்த விவகாரத்தின் பின்னணி தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னதாகவும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து தனது கவலைகளை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது.















