இலங்கை நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வரும் பொது மனுக்கள் குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கூட்டாக செயல்பட்டு தீர்வுகளை வழங்கி வருவதாக, அக்குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக இந்த நாடாளுமன்றக் குழுவிடம் முன்வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி வெளியான சிலுமின பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், பொது மனுக்கள் குழுவின் செயல்பாடுகள், அதன் அதிகாரங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
ஜனநாயக ஆட்சியில் மக்களின் இறையாண்மை அதிகாரம் செயல்படுத்தப்படும் பிரதான நிறுவனமாக நாடாளுமன்றம் விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு குழுக்களில், பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் முறைப்பாடுகளை நேரடியாக முன்வைக்கக்கூடிய விசேட அமைப்பாக பொது மனுக்கள் குழு விளங்குவதாக காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனமொன்றினால், அரச அதிகாரியொருவரால் அல்லது உள்ளூராட்சி நிறுவனமொன்றினால் அநீதி இழைக்கப்பட்டதாக ஒருவர் கருதினாலோ அல்லது தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உணர்ந்தாலோ, அது தொடர்பில் முறைப்பாடு செய்யக்கூடிய முக்கிய நாடாளுமன்ற பொறிமுறையாக இந்தக் குழு செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
10ஆவது நாடாளுமன்றத்தில் பொது மனுக்கள் குழு 29 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்களது மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடாக சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அந்த மனுக்கள் குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்படுவதாக அவர் விளக்கியுள்ளார்.
இந்த நாடாளுமன்ற பொறிமுறையை முறையாக வலுப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும், அதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கூட்டாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மனுக்கள் குழுவுக்கு அரச அதிகாரிகளை குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கும், அரச ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பரிசீலிப்பதற்கும், மனுவுடன் தொடர்புடைய இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும் அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10ஆவது நாடாளுமன்றத்தில் பொது மனுக்கள் குழுவின் செயல்பாடுகள் முன்னைய காலத்தைவிட அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாட்கள் மாத்திரமே குழு கூடியதாகவும், தற்போது ஒவ்வொரு நாடாளுமன்ற வாரத்திலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் குழு கட்டாயமாகக் கூடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடாளுமன்றம் கூடிய 157 நாட்களில், பொது மனுக்கள் குழு 60 நாட்கள் கூடியதாகவும், அந்தக் காலப்பகுதியில் 392 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான பரிந்துரைகள் மூன்று அறிக்கைகள் ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் குழு வழங்கிய பரிந்துரைகள் சில அரச அதிகாரிகள் அல்லது அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்ததாகக் கூறப்படும் விமர்சனத்துக்கும் தற்போது புதிய நடைமுறை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நிலையியற் கட்டளை 125(5) இன் கீழ் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பரிந்துரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கோரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6 முதல் 8 வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச துறையினால் ஏற்பட்ட அநீதி, அடிப்படை உரிமை மீறல் அல்லது அநியாயமான பழிவாங்கல் தொடர்பில் எந்தவொரு குடிமகனும் மனுவொன்றைத் தயாரிக்க முடியும்.
அந்த மனுவில் ஏற்பட்ட அநீதி தொடர்பான முழுமையான விபரங்களையும், தாம் எதிர்பார்க்கும் நிவாரணத்தையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பின்னர், தமது பிரதேசத்தைச் சேர்ந்த அல்லது தமக்குத் தெரிந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகவும் சபாநாயகரிடம் அந்த மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.
சபாநாயகரின் அனுமதியைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலின் 6ஆவது விடயமான “பொது மனுக்களை சமர்ப்பித்தல்” என்ற நடைமுறையின் கீழ் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்த மனுவை சபையில் சமர்ப்பிப்பார். அதன் பின்னரே அந்த மனு அதிகாரப்பூர்வமாக பொது மனுக்கள் குழுவிடம் அனுப்பப்படும்.
மனு கிடைத்த பின்னர், முதலில் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரிடம் இருந்து மனு தொடர்பான அறிக்கை கோரப்படும். அந்த அறிக்கை கிடைத்த பின்னர், அது மனுதாரருக்கு அனுப்பப்பட்டு அவரது கருத்துகளும் பெறப்படும்.
அதன்பின்னர் அமைச்சின் செயலாளர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மனுதாரர் ஆகியோர் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
நீதிமன்ற விசாரணையைப் போன்ற முறையில் சாட்சியங்கள் பெறப்பட்டு, மனுதாரருக்கு தனது தரப்பை விளக்குவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்புவதற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
மனுதாரர், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் ஒழுக்காற்று அதிகாரம் கொண்ட அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலித்து நியாயமான பரிந்துரையை வழங்குவதே குழுவின் நோக்கம் என காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அதை பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பொறிமுறையைப் பயன்படுத்துங்கள். நியாயமான காரணம் இருந்தால் உங்களுக்கு நிவாரணம் வழங்க பொது மனுக்கள் குழு கடமைப்பட்டுள்ளது. அது உங்கள் உரிமை. உங்களுக்குக் கிடைத்துள்ள அந்த உரிமையை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என அவர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
உதித குணவர்தன










