தடுப்புக் காவலில் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பில் இருந்தபோது அங்கிருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நதுன் சிந்தக்க என்ற ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்வதற்கு எவ்வித தடையும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இன்று (30) உத்தரவொன்றைப் பிறப்பித்து அறிவித்துள்ளார்.
அதேபோன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா, சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜராகியிருந்தது.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித்த ராஜபக்ஷ, சமகி ஜன பலவேகயவின் ஹோரணையின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டது, இந்த நதுன் சிந்தக்க என்ற ‘ஹரக் கட்டா’ எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை தடுப்புக் காவலில் இருந்து விடுவித்து சாதாரண சிறைக் கூடத்திற்கு மாற்றுவதற்கும், கொலையிலிருந்து பாதுகாப்பதற்கும் 12 கோடி ரூபாய் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலாகும்.










