இங்கிலாந்தின் பாதியளவுக்கும் அதிகமான பகுதி தீவிர வறட்சியை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய சுற்றாடல் முகவர் அமைப்பு எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பகுதி “தற்போது அவசர வறட்சியை எதிர்கொண்டுள்ளது” என்றும், “மிகக் குறைந்த மழைவீழ்ச்சி” மற்றும் அதிக வெப்பநிலையின் ஒருங்கிணைந்த தாக்கம் காரணமாக இந்த வறட்சி நாடு முழுவதும் மிக வேகமாக தீவிரமடைந்துள்ளது என்றும் அந்த அரசு நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
2026 ஜூலை மாதம் இதுவரை பதிவான மிக வறண்ட வானிலை நிலவிய மாதமாக மாறவுள்ளதால், இங்கிலாந்தின் பாதியளவுக்கு மேற்பட்ட பகுதி வறட்சியை எதிர்கொண்டுள்ளதாக சுற்றாடல் முகவர் அமைப்பு புதன்கிழமை அறிவித்தது. நாட்டின் மத்திய, கிழக்கு மற்றும் தெற்கின் பெரும்பகுதி தற்போது அவசர வறட்சியை எதிர்கொண்டுள்ளது.
ஜூலை மாத மழைவீழ்ச்சி வழக்கமாக ஒரு வருடத்தில் கிடைக்கும் அளவில் 7% ஆக மட்டுமே பதிவாகியுள்ளதுடன், இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் அது 1% மட்டுமே பதிவாகியுள்ளது. கிழக்கு ஆங்லியா, ஹெர்ட்ஃபோர்ட்ஷயர், கிரேட்டர் லண்டன், தேம்ஸ் பள்ளத்தாக்கு, ஹாம்ப்ஷயர் மற்றும் மத்திய தீவின் ஐல் ஆஃப் வைட், டெவோன், கார்ன்வால் மற்றும் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் ஆகியவை இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் அடங்கும்.
அதற்கமைய, நாட்டின் மேலும் மூன்றில் ஒரு பகுதி நீண்ட வறண்ட வானிலையை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
“நீர் மட்டம் சரிந்து வருகிறது, விவசாயிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அறுவடை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள், திடீர் காட்டுத்தீ ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரித்து வருகிறது, மேலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என பிரித்தானிய சுற்றாடல் முகவர் அமைப்பு தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“இயற்கை அதை மீண்டும் நிரப்பக்கூடிய வேகத்தை விட அதிவேகமாக நாம் தற்போது தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். நாம் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் இந்த ஆண்டின் இரண்டாவது கோடைகால வறட்சி (2025 இல் ஏற்பட்ட வறட்சிக்குப் பிறகு), நமது சுற்றாடல், வனவிலங்குகள் மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு விசேட தீவிர நிலைமையை உருவாக்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 29 செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் கூடிய சுற்றாடல் முகவர் அமைப்பின் நீர் பணிப்பாளரும், தேசிய வறட்சி சிறப்புப் பணிப்படைத் தலைவருமான ஹெலன் வேக்ஹாம் (Helen Wakeham) அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் அதன் அபாயகரமான விளைவுகள் குறித்து இவ்வாறு எச்சரித்தார்.
ஊடக அறிக்கையின் கருத்துக்களை மேற்கோள்காட்டிப் பேசிய மாபெரும் பிரித்தானியாவின் நீர் விவகார அமைச்சர் எம்மா ஹார்டி (Emma Hardy), நீர்த்தேக்கங்களில் “கசிவுகளை விரைவாக பழுதுபார்க்குமாறு” நீர் விநியோக நிறுவனங்களிடம் விசேடமாகக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
2026 மே மாதம் முதல் இங்கிலாந்து ஏற்கனவே மூன்று வெப்ப அலைகளை அனுபவித்துள்ளதாகவும், நான்காவது வெப்ப அலை தற்போது நிலவி வருவதாகவும் சுற்றாடல் முகவர் அமைப்பு தெரிவிக்கிறது. 1884 இல் வெப்ப அலைகள் பற்றிய பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து 2026 ஜூன் மாதமே மிகவும் வெப்பமான மாதமாக அமைந்ததுடன், பாடசாலைகளை மூடுவதற்கும் போக்குவரத்துத் தடைகளை எதிர்கொள்வதற்கும் கூட அந்நாடு நிர்பந்திக்கப்பட்டது.
ஜூன் 26 அன்று கிழக்கு இங்கிலாந்தின் லிங்வுடில் (Lingwood) புதிய வெப்பநிலை சாதனையாக 38°C (100°F) பதிவானதாக மாபெரும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித்திருந்தது.










