ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளையாட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள பின்னணியில், நியமிக்கப்பட்ட கிரிக்கெட் மாற்றுக் குழு (Cricket Transformation Committee) குறைந்த காலப்பகுதிக்குள் நிர்வாக ரீதியாகப் பாரிய பணிகளை அமைதியாகச் செய்து முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் தலைவர் எரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட உறுப்பினர்களால் நேற்று (28) நடாத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இதுவரை காலமும் சட்ட நடவடிக்கைகளுக்காக ஆண்டொன்றுக்கு 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி விரயமாக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய குழுவினர், இவ்வாறான வீண் விரயங்களைக் குறைத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) புரிதலுடன் புதிய கிரிக்கெட் அரசியலமைப்பொன்றை வரைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மாறும்போதெல்லாம் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டதாக இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கிரிக்கெட் மாற்றுக் குழுவின் உறுப்பினர் சிதத் வெத்தமுனி சுட்டிக்காட்டினார்.










