ஜே.வி.பி. பொதுச்செயலாளர் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு!

Tilvin-Silva-2026.07.29-1

ஜனதா விமுத்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 27ஆம் திகதி ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் ஜே.வி.பி.யின் அரசியல் சபை உறுப்பினரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.

பிரகாஷ் காரத், 2005 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியதுடன், 2025ஆம் ஆண்டு வரை கட்சியின் அரசியல் சபை உறுப்பினராகவும் செயற்பட்ட முக்கியத் தலைவராவார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்குப் பின்னர், 2025 ஏப்ரல் மாதம் வரை கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகவும் பிரகாஷ் காரத் பொறுப்பு வகித்தார். பிருந்தா காரத் 1993 முதல் 2004 வரை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர் என்பதுடன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவருமாவார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியைப் பிடித்தமை, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த முடிந்தமை தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், முன்மாதிரியான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி, ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்தல் மற்றும் சலுகைகள் சார்ந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்