ரஷ்யா – வடகொரியா இடையே முதல் சாலை இணைப்பு பாலம் இறுதிக்கட்டத்தில்

image_2026-07-28_101228823

ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே முதல் முறையாக நேரடி சாலை இணைப்பை ஏற்படுத்தும் பாலத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கசான் (Khasan) நகரத்தையும், வடகொரியாவின் துமங்காங் (Tumangang) பகுதியையும் இணைக்கும் வகையில் துமென் (Tumen) ஆற்றின் மீது இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

வடகொரியா தனது எல்லைப் பகுதியில் சுங்க மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறைவு செய்துள்ள நிலையில், ரஷ்ய தரப்பில் சில பணிகள் இன்னும் தொடர்வதால் பாலம் திறக்கப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ரஷ்யா மற்றும் வடகொரியா அரசுகள், இந்தப் பாலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை விரிவுபடுத்தும் நோக்கில் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சர் அந்த்ரே நிகிடின், புதிய சாலைப் பாலம் திறக்கப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அதிகரிப்பதுடன், போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, கலாசார உறவுகள் வலுவடையும் என்றும், எல்லைப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வடகொரியாவின் அரச ஊடகமான KCNA, இந்தப் பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களின் பயணம், சுற்றுலா மற்றும் பொருட்களின் பரிமாற்றத்தை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு கிலோமீற்றர் நீளமும், இரண்டு வழித்தடங்களையும் கொண்ட இந்தப் பாலம், இரு நாடுகளுக்கிடையிலான முதல் நிரந்தர சாலை இணைப்பாக அமைவதுடன், எல்லைப் பகுதிகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்