அரசாங்கம் மக்களின் ஆணைப்படி நடக்க வேண்டுமா அல்லது தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கச் செயற்பட வேண்டுமா என்ற கேள்வி பற்றி நாம் மிக ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையை ஆட்சி செய்துவந்த பிரபுத்துவ மற்றும் பாரம்பரிய அரசியல்வாதிகளைத் தோற்கடித்து, மக்கள் ஒரு புதிய ஆட்சியைத் தெரிவுசெய்ததற்கான உண்மையான காரணம் என்னவென்பதைப் பற்றியும் சற்று சிந்தித்தாக வேண்டும். மக்களால் தனித்தனியாகத் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று ஒரே அணியாகத் திரண்டு, தேசிய மக்கள் சக்திக்கு இந்நாட்டு மக்கள் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆணைக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைப்பதை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
பொதுவாக ‘எதிரணி’ என்று ஒட்டுமொத்தமாக அழைப்பதைக் காட்டிலும், தனிநபர்களாக அவர்களின் பின்னணியை வரிசைப்படுத்தி நடப்பு அரசியலை ஆராய்வது கூடுதல் தெளிவைத் தரும். அதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கை அல்லது கெஞ்சல் என்னவென்பதைப் பார்ப்போம்.

நாட்டின் நீதித்துறையில் உள்ள நீதியரசர் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை எதிரணியினர் கடுமையாக எதிர்க்கின்றனர். தொழில்சார் தேவைகளையும் அமைப்பின் செயல்திறனையும் கருத்தில் கொண்டு, மேல் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளுக்கு மட்டுமன்றி, மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நீதிமன்ற அமைப்பில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் வயதை இணையாக நீட்டிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். ஏனெனில், இலங்கையின் நீதிமன்றங்களில் ஏறக்குறைய 11 இலட்சம் வழக்கு விசாரணைகள் இன்னமும் முடிவின்றி நிலுவையில் இருக்கின்றன. இவற்றை விரைவுபடுத்துவதற்காகவே புதிய திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவர முனைகிறது.
இச்சட்டம் கொண்டுவரப்படுவதால் பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படப்போகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக, பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்ற வழக்குகளுக்குத் துரிதமான தீர்ப்பு கிடைக்கும்; பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் நீதி கிடைக்கும்; பணச் செலவும் அலைச்சலும் குறையும்; நீண்டகாலத் தாமதத்தால் சாட்சிகளும் சான்றுகளும் அழிக்கப்படுவது தவிர்க்கப்படும்; நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தற்போது இலங்கையில் சுயாதீனச் சட்டத்துறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், எவ்வித அரசியல் தலையீடுமின்றி நியாயம் நிலைநாட்டப்படும். அதேவேளை, குற்றம் புரிந்தவர்கள் நீண்ட நாட்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வெளியில் உலவுவதற்கான வாய்ப்பும் அற்றுப்போகும்.
இலங்கை அரசியலமைப்பின் 107(2) உறுப்புரையின்படி, நாட்டின் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நன்னடத்தையுடன் செயல்படும் காலம் வரை மட்டுமே பதவி வகிக்க முடியும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப் பிரேரணை (Impeachment) போன்ற முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதன் மூலம் மட்டுமே அவர்களைப் பதவியிலிருந்து நீக்க முடியும். இந்த அரசியலமைப்பு விதியானது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன், நிறைவேற்று அதிகாரத்தின் தேவையற்ற தலையீடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
இருப்பினும், தற்போதைய சட்டக் கட்டமைப்பின்படி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும் (அரசியலமைப்பு உறுப்புரை 107(5)), மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 63 வயதிலும், மேல் நீதிமன்ற நீதிபதிகள் 61 வயதிலும் (1978ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நீதிமன்ற அமைப்பிச் சட்டம்), மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் 60 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர். 1978ஆம் ஆண்டுக்கு முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 ஆக மட்டுமே இருந்தது. 1978 அரசியலமைப்பின் மூலமே அது 65 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 48 ஆண்டுகளாக எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கும் இந்த பழமையான சட்ட வரம்புகளை, காலத்தின் தேவைக்கேற்பவும் நவீன மக்கள் தொகையியல் உண்மைகளுக்கு ஏற்றவாறும் புதுப்பிக்கும் ஒரு முற்போக்கான நடவடிக்கையாகவே தற்போதைய திருத்தம் அமைகிறது.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களிலும் பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களிலும் “நியாயமான காலத்திற்குள் விசாரணை” (Reasonable Time) என்பது நீதிக்கான முக்கிய உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வழக்கு பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் தேவையற்ற காரணங்களால் நிலுவையில் இருப்பது, நீதித்துறையின் செயல்திறன் குறித்துக் கேள்விகளை எழுப்பும் ஒரு முக்கியப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. அதனால்தான் உலகளவில் “தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்” (Justice delayed is justice denied) என்ற சட்டக் கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
25 முதல் 30 ஆண்டுகள் வரை நீதிமன்ற அமைப்பில் பணியாற்றிய ஒருவரின் சட்ட முதிர்ச்சி, திறமை மற்றும் சாட்சியங்களை விசாரிப்பதில் உள்ள நடைமுறை அறிவு என்பன விலைமதிப்பற்ற அறிவுசார் சொத்துக்களாகும். சராசரி ஆயுட்காலம் 77 ஆண்டுகளாக உள்ள இலங்கையில், அரசுச் செலவில் பயிற்சி அளிக்கப்பட்ட அத்தகைய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை 60 அல்லது 65 வயதிலேயே ஓய்வுபெறச் செய்வது நீதிமன்ற அமைப்பிற்கு ஏற்படும் மிகப்பெரிய இழப்பாகும்.
மேலும், ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற கூற்றில் எந்த நியாயமும் இல்லை. மாறாக, ஒப்பீட்டளவில் குறைந்த வயதில் ஓய்வுபெறும் நீதிபதிகள், ஓய்வுக்குப் பிந்தைய தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் சமூக அந்தஸ்திற்காகவும் அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு ஆணைக்குழுக்களில் பதவிகள், தூதரகப் பதவிகள் அல்லது பிற ஆலோசகர் பதவிகளை எதிர்நோக்கி இருக்கும் சூழல் உள்ளது. ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதன் மூலம், நீதிபதிகள் தங்களின் உச்சக்கட்ட முதிர்ச்சி வரை நீதிமன்றத்திற்குள்ளேயே எந்தவொரு தயவுக்கும் எதிர்பார்க்காமல் சுயாதீனமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
அதேபோல, ஆரம்பக் கட்டத்தில் எதிர்க்கட்சியினர் வாதிட்டது போல கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு தாமதமாகும் என்ற குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானதாகும். ஏனெனில், அரசாங்கம் முன்மொழிந்துள்ளது மேல் நீதிமன்றங்களுக்கு மட்டும் அல்ல; நீதவான் நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை ஒட்டுமொத்தப் படிநிலையிலுள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரே நேரத்தில் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதால், பதவி உயர்வு நடைமுறைகளில் எந்தவொரு தடையோ பாதிப்போ ஏற்படப்போவதில்லை. சர்வதேச அளவில் ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 75 ஆகவும், அவுஸ்திரேலியாவில் 70 ஆகவும் இருப்பதை நோக்கும்போது, இலங்கையின் இம்மாற்றம் உலகளாவிய நியமங்களுடன் ஒத்துப்போவதைக் காணலாம். அத்துடன், சிரேஷ்ட நீதிபதிகள் சீக்கிரமாக ஓய்வுபெறும்போது அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிவிட்டு, புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு முழுச் சம்பளம் வழங்குவதால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இரட்டை நிதிச் சுமையையும் இது கணிசமாகக் குறைக்கிறது.
அப்படியாயின், புதிய திருத்தச் சட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்படப் போவது யார்? குற்றம் புரிந்தவர்களும், பல்லாண்டுகளாக வழக்கு விசாரணைகளை இழுத்தடித்துத் வாழ நினைப்பவர்களுமே ஆவர். எனவேதான், முன்னணியில் நின்று இதனை தீவிரமாக எதிர்ப்பவர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். தம் கோரிக்கைக்குப் பலன் கிடைக்காது என்பதை அறிந்த எதிரணியினர், அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்றுகூடினர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர, உதய கம்மன்பில, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாமர சம்பத், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பல எதிரணி அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாவர். அத்துடன், இவர்களில் பலர் பல்வேறு நிதி மோசடிகள் மற்றும் குற்றவியல் வழக்கு விசாரணைகளில் தொடர்புடையவர்கள்; அதாவது பிணையில் வெளியில் வந்தவர்களாகவும், சந்தேகநபர்களாகவும் இருக்கிறார்கள். கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசுகளான இவர்களில் பலர் 65 வயதைக் கடந்தவர்கள். இவர்கள்தான் தற்போது ஓய்வுபெறும் வயதெல்லையைத் திருத்துவதற்கான சட்டத்திற்கு எதிராக “ஜனநாயகம் பறிபோகிறது” என்று கூச்சலிடுகிறார்கள்.
76 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்த இவர்கள், தற்போது சுயாதீனச் சட்ட நடவடிக்கைகளைக் கண்டு பதற்றமடைந்திருக்கின்றனர். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஆயுதமாக்கிக்கொண்ட ஜே.ஆர். ஜெயவர்தன, “தன்னால் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்ய முடியும்” என்று இறுமாப்புடன் கூறினார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், தமிழ் மக்கள், இரத்மலானையில் பாதசாரி கடவை கேட்டுப் போராட்டம் நடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என அனைவரையும் அவர் கொடூரமாக அடக்குமுறைக்கு உள்ளாக்கினார்.
1982 மார்ச் மாதம் மகளிர் தினத்தன்று அரசாங்கத்திற்கு எதிராக அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வயலட் விவியன் குணவர்த்தன உள்ளிட்ட பெண்களை, பொலிஸாரையும் குண்டர்களையும் ஏவிவிட்டுத் தாக்கினார். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி இதற்கு எதிராக விவியன் குணவர்த்தன உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தார். வழக்கை விசாரித்த நீதியரசர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குக் குற்றவாளிகள் நட்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதையடுத்து, ஜே.ஆரின் அரசியல் அடியாளான கலு லக்கி என்பவன், நீதியரசர்களின் வீடுகளுக்குச் சென்று கல்லெறிந்து, கூச்சலிட்டு அச்சுறுத்தினான்.
இது குறித்துக் கருத்து தெரிவித்த அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, “நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு நமது நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது” என்றார். அதாவது, நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாக நின்று நீதித்துறையின் சுதந்திரத்தை பகிரங்கமாகக் கேள்விக்குறியாக்கினார்.
அதுபோல, பொதுத் தேர்தலைப் பிற்போட்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையைத் தொடர்ந்து தக்கவைப்பதற்காக ஜே.ஆர். ‘விளக்கு – குடம்’ எனும் மோசடிமிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். இத்தேர்தலுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவிர, பிரின்ஸ் குணசேகர மற்றும் சட்டத்தரணிகளான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, எஸ்.டி. பண்டாரநாயக்க ஆகியோர் 1982 ஜனவரியில் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். ஜே.ஆரின் கள்ள ஆட்டங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருந்த நிலையில், 1983இல் ‘கறுப்பு ஜூலை’ தமிழர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்பட்டு, அதைப் பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது. அதையடுத்து, 1984இல் பிரதம நீதியரசரான நெவில் பெர்ணான்டோவுக்கு எதிராக ஜே.ஆர். அரசாங்கம் குற்றப்பிரேரணை கொண்டுவந்தது. நீதித்துறையினதும் தான் வகித்த பதவியினதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவர் தாமாகவே முன்வந்து இராஜினாமா செய்து வெளியேறினார்.
இவ்வாறாகத்தான் கடந்த கால ஆட்சியாளர்கள் நீதித்துறையையும் சட்டத்துறையையும் ஒடுக்கினர். இதுபோன்றதொரு பழிவாங்கல் சம்பவம்தான் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராகப் பதவிநீக்கப் பிரேரணை கொண்டுவரப்பட்டமையாகும்.
மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த ‘திவிநெகும’ சட்டமூலத்தின் சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என அப்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் பழிவாங்கும் நோக்கில் பதவிநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவரைப் பதவியில் இருந்து நீக்கி, மொஹான் பீரிஸைப் பிரதம நீதியரசராக நியமித்தார். பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவிநீக்கம் சட்டவிரோதமானது என அறிவித்து, அவரை மீண்டும் பிரதம நீதியரசராக நியமித்தார். பதவியேற்ற மறுநாளே அவர் அதிகாரப்பூர்வமாக ஓய்வுபெற்றார்.

இவ்வாறாகத்தான் தற்போது எதிரணியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐக்கிய மக்கள் சக்தி இதில் அடங்கும்) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதில் அடங்கும்) ஆகியன அதிகாரத்தில் இருந்தபோது, நீதித்துறையையும் சட்டத்துறையையும் தமது தலையாட்டி பொம்மைகளாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தன. பிரதம நீதியரசர்கள் உள்ளிட்ட நீதித்துறையைச் சார்ந்த பலரைப் பழிவாங்கிய இதே கும்பல்தான், இன்று தங்களின் சொந்தக் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக “நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று நாடகமாடுகின்றது.
ரோஹண விஜேவீர 1988 ஆம் ஆண்டு பிரபுத்துவ அரசியல்வாதிகளைப் பற்றிக் கூறிய பின்வரும் கருத்து, அவரது அன்றைய அரசியற்பார்வையின் ஆழத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அதாவது, “திருடர்கள் பகலில் சண்டையிட்டுக்கொள்வார்கள்; இரவில் ஒன்றாகச் சேர்ந்து திருடச் செல்வார்கள். இரு பாரம்பரியக் கட்சிகளின் கதையும் இதுதான்.
பாராளுமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் ஒருவரையொருவர் “திருடர்கள்” என்று பகிரங்கமாகத் திட்டித் தீர்த்த இவர்கள், திரைமறைவில் ஒன்று கூடி ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டனர். இவர்களின் இந்த கபடத்தனம் வெளிச்சத்திற்கு வந்து, மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர், சட்டத்தின் பிடியில் சிக்கி நாதியற்றுப்போன இவர்கள் இன்று பட்டப்பகலில் மக்களின் கண்முன்னே ஒன்றுசேரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தையே வெளிப்படுத்துகிறது.
இரண்டே வருடத்தில் திடீரெனப் புதிதாகப் பிறந்து, வளர்ந்து, சட்டக்கல்வி கற்று அனுபவம் வாய்ந்த நீதியரசர்களாகவோ நீதிபதிகளாகவோ எவராலும் வர முடியாது. பல ஆண்டுகளாக அத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் சேவையை மேலும் 2 ஆண்டுகள் பயன்படுத்துவது, தேங்கிக் கிடக்கும் 11 இலட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதோடு நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் சாதகமான ஒன்றாகும். அதாவது, நீதித்துறையின் சுதந்திரம் என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. அதை உறுதிப்படுத்துவதற்காகவே தற்போது ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகிறது.
48 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்த அரசியலமைப்பு மற்றும் சட்டத் திருத்தமானது, வழக்குத் தாமதங்களால் தவிக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நடைமுறைக்கேற்ற ஒரு முடிவாகும். எனவே, பழைய ஊழல் அரசியலை நிராகரித்து மக்கள் வழங்கிய புதிய ஆணையைச் செயல்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதாவது, குற்றம் புரிந்த அரசியல்வாதிகளுக்கு பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்க வேண்டும் என்பதே முறைமை மாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் ஆணையாகும். இது எவ்விதத்திலும் அரசியல் பழிவாங்லாக அமையாது. எனவே, எதிரணியில் இருக்கும் குற்றவாளிகளின் போலி அச்சுறுத்தல்களுக்கும், சுயநலக் கூச்சல்களுக்கும் செவிமடுக்காமல், நீதித்துறையைச் சீரமைத்து மக்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் வரலாற்றுப் கடமையாகும்.
சதீஸ் செல்வராஜ்










