83 கறுப்பு ஜூலை – இலங்கையின் அரசியல் வடுக்களும் தேசிய ஒருமைப்பாடும்

image_2026-07-27_090206006

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது வெறும் நாட்காட்டியின் பக்கமாற்றமல்ல,  அது குருதியினாலும் கரிக்கட்டைகளினாலும் கறைபடிந்துபோன ஒரு வரலாற்று வடு. பேரினவாத அரசியல் தலைவர்களின் குறுகிய சொந்தத் தேவைகளுக்காகவும் அதிகாரப் பசிக்காகவும் ஏனைய இனத்தவர் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், ஒவ்வொரு கட்டத்திலும் பெருஞ்சேதங்களை மாத்திரமே மிச்சப்படுத்தின. காயங்கள் காலத்தால் ஆற முற்பட்டாலும், அதிலிருந்து கசிந்த வடுக்கள் நாட்டின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

1977இல் தொடங்கி, 1980 ஜூலை தொழிலாளர்கள் பணிநீக்கம், 1981 யாழ். நூலக எரிப்பு, 1983 கறுப்பு ஜூலை, 1987 இந்து-லங்கா ஒப்பந்தம் என இலங்கை வரலாற்றை உலுக்கிய பல திருப்புமுனைச் சம்பவங்களின் பின்னணியில் இந்த ஜூலை மாதத்தின் இருண்ட அத்தியாயம் கிறுக்கப்பட்டது.

1983ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை வன்முறைகள் திடீரென வெடித்த ஒன்று கிடையாது; மாறாக, அது அரச இயந்திரத்தின் பின்னணியோடு கூடிய திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகளின் உச்சக்கட்டமாகும். 1983 ஜூலை 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முற்றுகையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது தாக்குதல் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி) உயிரிழந்தார். தனது தோழனின் இழப்புக்குப் பழிவாங்கும் நோக்கில், பிரபாகரன் தலைமையிலான குழுவினர் ஜூலை 23 ஆம் திகதி இரவு ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தி, 13 இலங்கை இராணுவச் சிப்பாய்களைக் கொன்றனர்.

இந்தச் சம்பவத்தை ஒரு போர்க்கள இழப்பாக அணுகாமல், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் கலவரமாக உருமாற்ற அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் திட்டமிட்டது. உயிரிழந்த சிப்பாய்களின் உடல்களை வழக்கம்போல உறவினர்களிடம் ஒப்படைக்காமல், கொழும்பு பொரளை கனத்த மயானத்திற்கு கொண்டு வந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கத்தினரையும் காடையர்களையும் திரட்டி இனவாதக் கோஷங்களை எழுப்பச் செய்து, நாடளாவிய ரீதியில் கறுப்பு ஜூலையை வெடிக்கச் செய்தனர்.

இந்த வன்முறைகளின் பின்னணியில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தீவிர அமெரிக்க விசுவாச அரசியல், இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு மற்றும் உள்நாட்டு அரசியல் தோல்விகள் என்பன முதன்மை பெற்றிருந்தன. ‘யங்கி டிக்கி’ என்று அழைக்கப்பட்ட ஜே.ஆர்., 1977 தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், வடக்கில் படுதோல்வியைச் சந்தித்தார். வடக்கில் தமிழீழப் பிரகடனமும், தெற்கில் மேலெழுந்த சிங்கள பேரினவாதமும் அரசியல் களத்தை ஆக்கிரமித்திருந்தன. வடக்கில் அடைந்த தோல்வியால் உருவான வன்மமும், 1978இல் கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்ட கடுமையான பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, சமூகப் பாதுகாப்பு வலையமைப்புகளின் தகர்வு, தொழிலாளர்களின் போராட்டங்கள் போன்றவற்றை திசைதிருப்பவும் ஜே.ஆர். தமிழ் மக்கள் மீதான வன்முறையைக் கருவியாகப் பயன்படுத்தினார். 1977 கலவரம், 1981 யாழ். நூலக எரிப்பு, 1982 குடியொப்ப மோசடிகள் எனத் தொடர்ந்த அடக்குமுறைகளின் உச்சக்கட்டமாகவே 1983 கறுப்பு ஜூலை அமைந்தது.

கறுப்பு ஜூலையின் போது 400 முதல் 3,000 வரையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சாம்பலாக்கப்பட்டன. தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்டு வெடித்த இந்த வன்முறையின் போது, வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் கோனவல சுனில் தலைமையிலான காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

ஜூலை கலவரத்தில் சிங்களத் திரையுலகிற்கு ‘சிறிபத்துல’ போன்ற கலைப்படைப்புகளை வழங்கி, பௌத்தர்களின் புனித நாட்களான பொசொன் மற்றும் வெசாக் காலங்களில் இன்றும் ஒலிக்கின்ற பாடல்களை உருவாக்கிய இயக்குநர் கே. வெங்கட் கூட எரித்துக் கொல்லப்பட்டார். அரசாங்கத்தின் இந்த இன அழிப்பு நடவடிக்கையானது, தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்திய போராட்ட இயக்கங்களை நோக்கித் தள்ளியதுடன், பல தசாப்தகால பேரழிவிற்கும் வழிகோலியது.

அதேவேளை, தன் மீதான குற்றச்சாட்டுகளையும் பழிச்சொற்களையும் தூக்கி எறிவதற்காக ஜே.ஆர். அரசாங்கம், கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணம் எனக் கூறி, ஜே.வி.பி., கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரி அமைப்புகளைத் தடை செய்தது. இது தெற்கில் இரண்டாவது இளைஞர் எழுச்சிக்கும் இரத்தக் களறிக்கும் மூலக்காரணமாக அமைந்தது.

பிற்காலத்தில் ஐ.தே.க.வின் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் அன்றைய அமைச்சரவையில் இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோர், அன்றைய அரசாங்கம் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதை ஒப்புக் கொண்டதும் பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டதும் இந்த வரலாற்றுத் துரோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

கடந்த காலத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்தி வந்த கட்சிகள், நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளித் தோற்றுப்போயின. ஆனால், கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளிலிருந்தும் பிளவுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்ட இலங்கை மக்கள், குறுகிய இனவாத எல்லைகளை நிராகரித்து, ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மலைநாடு என அனைத்துப் பகுதி மக்களும் ஒரே கொடியின் கீழ் திரண்டு, பிரிவினைவாதத்தையும் பேரினவாதத்தையும் நிராகரித்துள்ளனர். கடந்த காலங்களில் பேரினவாதத்தை விற்றுப் பிழைத்த சக்திகளும், இனவாதத் தரகர்களும் இந்த மக்கள் ஒருமைப்பாட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்தாலும், கடந்த காலத்தின் வடுக்களைத் துடைத்தெறிந்து, பரஸ்பர அச்சமும் சந்தேகமுமற்ற ஒரு புதிய ‘இலங்கைப் பிரஜையை’ உருவாக்குவதே இன்றைய காலகட்டத்தின் முதன்மையான தார்மீகப் பொறுப்பாகும்.

சதீஸ் செல்வராஜ்

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்