
தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு நியாயமான போராட்டத்திற்கும் எந்தவொரு நிபந்தனையுமின்றி மக்கள் விடுதலை முன்னணி உடன் நிற்கும் – டில்வின் சில்வா
தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு நியாயமான போராட்டத்திற்கும் எந்தவொரு நிபந்தனையுமின்றி மக்கள் விடுதலை முன்னணி உடன் நிற்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
நேற்று (16) மஸ்கெலியா மற்றும் நோர்வுட் பிரதேசங்களில் தோட்ட மக்களுடனானக் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
“06 வருடங்களுக்கு முன்பிருந்தே தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க நாமும் போராடிக்கொண்டு இருக்கிறோம். அன்றிருந்த வாழ்க்கைச் செலவிற்கேற்ப 1000 ரூபாய் கேட்டு நாம் போராடினோம்.
06 வருட போராட்டங்களுக்குப் பின்பு இப்போதுதான் 1000 ரூபாய் கிடைக்கவிருக்கிறது. ஆனால், இன்று விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துப்போய் உள்ளன.
நாம் கேட்ட முதற் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் 1000 ருபாய் சம்பளத்தை வழங்கிவிடவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே கம்பெனியின் 900 ரூபாவுடன் அரசாங்கத்தின் 100 ரூபாவையும் சேர்த்து 1000 ரூபாய் தரப்போகிறார்கள்.
கூட்டு உடன்படிக்கையில் கிடைத்த சலுகைகள் சம்பள நிர்ணய சபையினூடாக சம்பளத்தை உயர்த்தும்போது இல்லாமல் ஆக்கப்படலாம். அச்சலுகைகள் வழங்கப்படாது போனால் அதனை வென்றெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
இந்நாட்டின் பொருளாதாரத் தூண்கள் நீங்கள். அந்நிய செலாவணி மூலமும் பணத்தைத் தேடிக்கொடுக்கிறீர்கள். உங்களது வியர்வையினால் தோட்டங்கள் செழிப்புற்றது. ஆனால், நீங்கள் மனிதர்களாக வாழக்கூடியச் சூழலை இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நீங்கள் சிந்துகின்ற வியர்வையின் பெறுமதிக்கு உரிய ஊதியம் உங்களுக்கு வழங்கப்படவில்லை. குறைந்த வசதியுடனான வீடுகள் இல்லை. அநேகமானோர் இன்னமும் லயன் காம்பிராக்களிலேயே வாழ்கிறார்கள்.
பிள்ளைகள் முறையாக கற்பதற்கு வசதிகள் அடங்கிய பாடசாலைகள் இல்லை. ஒழுங்கான அரச மருத்துவமனை இல்லை. அவ்வாறு இருந்தாலும் அங்கு மருந்துகள் இல்லை. சனசமூக நிலையங்கள் இல்லை. மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கான மைதானமோ அல்லது வேறு வசதிகளோ இல்லை.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுடைய கல்வித் தகைமைகள் குறைவு என்பதால் வேறு நல்ல தொழில் செய்யமுடியாத நிலைமை காணப்படுகிறது. தோட்டங்களிலேயே வேலைசெய்ய அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது நியாயமற்றது.
உரிமைகள் உள்ள, அந்தஸ்துள்ள கௌரவமானப் பிரஜைகளாக நீங்கள் வாழ் வேண்டும். ஆனால், அந்த உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவராலும் முடியாது உள்ளது.
வாழ்க்கை என்பது இதுவல்ல. இதற்கும் மேலான வாழ்க்கை ஒன்றுள்ளது. இதுவரை எந்த அரசாங்கமும், மலையகத் தலைவர்களும் அதனைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அதனால் சம்பள போராட்டத்தை மாத்திரம் நடத்திக்கொண்டு ஏழ்மையில் மூழ்கி இருக்கிறோம். இந்த வாழ்க்கையை நாம் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டாமா? உங்களது பிள்ளைகள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்வதை பார்க்க நீங்கள் ஆசைப்படவில்லையா? எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.”
P2P க்கு கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சி – இரா.சாணக்கியன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீடகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சி ஆகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…
“இந்தப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது உலகம் பூராகவும் பார்க்க வேண்டும். எமது மக்களின் பிரச்சினைகள் உற்றுநோக்கப்பட வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தோம்.
இந்தப் போராட்டமானது தமிழ் மக்களினதும், தமிழ்பேசும் மக்களினதும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டமாகவே நடத்தியிருந்தோம். இதனை எவரும் திசைதிருப்பக்கூடாது.” என்றார்.
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு இன்று முதல் 25 வரை கற்றல் விடுமுறை
2020 டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி இன்று (17) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண, வலய மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் போது அவர்களது கற்றல் விடுமுறைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
PCR க்கு பொது உதவியை நாடும் பேராதனைப் பொறியியற் பீட மாணவர்கள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் பீட மாணவர்களுக்கான மக்கள் நன்கொடையை நிறுவுவதற்கு குறித்த பீடத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பீடத்தில் முதற் பிரிவில் 08 மாணவர்கள் இதுவரையில் கொரோனா தொற்றுடையவர்கள் என்று அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த 36 மாணவர்களும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 310 மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
12 மில்லியன் டொலர் தருகிறோம் – மூன்று தீவுகளையும் எமக்கு தாருங்கள்
வடக்கு மாகாணங்களில் உள்ள டெல்ப், நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தம்மிடம் வழங்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் சட்டரீதியாகக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக தாம் 12 மில்லியன் டொலர் (228 கோடி ரூபாய்) தருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இத்திட்டமானது அமைச்சரவை தீர்மானத்துடன் கடந்த தினத்தில் சீன நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டிருத்தது. இந்தியாவுக்கு அண்மையில் சீனா இவ்வாறு வேலைகளை செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்தியா குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் இக்கருத்துக்கு வடக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்து – இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படுமாம்…
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பாக்கிஸ்தான் பிரதமரை உரையாற்றுவதற்கு அனுமதிப்பது இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை அரசாங்கத்தின் சிலர் கருதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை நாடாளுமன்ற உரையில் பாக்கிஸ்தான் பிரதமர் காஸ்மீர் விவகாரத்தை எழுப்பக்கூடும் என இந்தியா கருதலாம் என இலங்கை அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கருதியுள்ளனர்.
காலத்தை வென்றவர்கள் : புரூனோ நினைவு நாள்….
ஜியார்டனோ புரூனோ ஒருஇத்தாலிய தத்துவ அறிஞர், அறிவியலாளர், கவிஞர். தெற்கு இத்தாலியில் நோலா எனும் நகரில் 1548 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஃபிலிப்போ. பின்னர் நேபிள்ஸ் நகரம் சென்றபோது, தமது 17 ஆவதுவயதில் அவர் வைத்துக் கொண்ட பெயரே ஜியார்டனோ.
அவரது சுதந்திர சிந்தனைகளால் பலரும் அவரை கிளர்ச்சிக்காரராகவே பார்த்தனர். பல நாடுகள், நகரங்கள் என அவரது கல்வியும் பயணமும் தொடர்ந்தது. மதரீதியான சிந்தனையிலிருந்து விஞ்ஞான ரீதியான சிந்தனைகளில் முழு மூச்சாக இறங்கினார்.
‘‘இந்த உலகம் உருண்டையானது; பூமி சுற்றுவதால்தான் இரவு பகல் ஏற்படுகிறது; சூரியன்தான் சூரிய மண்டலத்தின் மையம்; சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டிருக்கிறது; விண்வெளியில் இரவில் தெரியும் விண்மீன் களைப் போன்றே சூரியனும்ஒரு விண்மீன். எல்லா விண் மீன்களுக்கும் பூமி போல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது’’ என்றபலவகையான வானவியல் கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே முதன் முதலில்பகிர்ந்த விஞ்ஞானி ஜியார் டனோ புரூனோ.
அதற்காக அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு 1600 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 இல் ரோம்நகர் கிறிஸ்தவ மதச்சபை அவரை உயிருடன்எரித்துக் கொன்றது. அவரின் அர்ப்பணிப்பு என்பது அறிவியல் உலகில் மகத்தானது. இறையியல் கொள்கைக்கும் இயற்கை தத்துவவாதிகளுக்கும் துளிர்விட்ட சுதந்திரதாகத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால்வெடித்த தீமூட்டல் இது என நவீன அறிவியல்முன்னோடிகளால் கணிக்கப்படுகிறது.
நன்றி : தீக்கதிர்
எங்களை பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கு
யாழ்ப்பாண சித்த மருத்துவ பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகளினால் நேற்றைய தினம் (16) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களை பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் பேரணி இடம்பெற்றது.
ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட சித்த மருத்துவ பட்டதாரி மாணவர்கள், தங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பார்ட்டப் பேரணி சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரை இடம்பெற்றிருந்தது
உலகளவில் கொவிட் – 19 மரணங்கள் 10 சதவீதத்தால் வீழ்ச்சி!
கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் எட்னம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையி்ல், ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொற்றாளர்கள் பதிவாவது 20 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது என்றார்.
அவ்வாறே, தென்கிழக்காசிய வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 13 சதவீதத்தினாலும் அமெரிக்க வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.
கடந்த வாரத்தினுள் ஐரோப்பிய வலயத்தினுள் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி, கிழக்கு மத்திய தரைகடல் பிராந்தியத்தினால் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 7 சதவீத அதிகரிப்பை காட்டுவதாகும் தெரிவித்தார்
- « Previous Page
- 1
- …
- 594
- 595
- 596
- 597
- 598
- …
- 601
- Next Page »