மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், மத்திய அரசின் 550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ஏழு மாடிகளைக் கொண்ட சிறுநீரக மற்றும் இரத்த சுத்திகரிப்பு பிரிவு (Nephrology and Dialysis Unit), சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜெயசிங்க தலைமையில் அண்மையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பீடூ செய்யப்பட்டது.
அத்துடன், சிறுநீரக மற்றும் இரத்த சுத்திகரிப்பு பிரிவின் இரத்த சுத்திகரிப்பு பிரிவும் சுகாதார அமைச்சின் செயலாளரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், கிளினிக்குகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் (ICU) மற்றும் அறுவை சிகிச்சை கூடங்கள் உட்பட பல நவீன வசதிகளை இப்பிரிவு கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வருவதால், இந்நோயாளர்களின் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, இடைநிறுத்தப்பட்டிருந்த இச்சிறுநீரக சிகிச்சை பிரிவின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் முறையான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து, இம்மாவட்டத்தில் வாழும் 589,172 மக்களுக்கும் மற்றும் அயல் மாவட்ட மக்களுக்கும் தரமானதும் திறமையானதுமான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து சுகாதாரத்துறை பிரதானிகளுடனும் கடந்த ஜூலை மாதம் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார். இதன் போது வைத்தியசாலையின் பெளதிக மற்றும் மனித வளக் குறைபாடுகளை விரைவாக பூர்த்தி செய்யவும், சிறுநீரக சிகிச்சை பிரிவின் எஞ்சிய கட்டுமானப் பணிகளை விரைவாக ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜெயசிங்க, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மற்றும் இரத்த சுத்திகரிப்பு பிரிவு திறக்கப்பட்டதன் மூலம் சிறுநீரக சிகிச்சை சேவைகள் வலுப்பெற்று, கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரலாற்றில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் 2025 மே 15 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகங்களான வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், வைத்தியர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன, சாகரீ கிரிவந்தெனிய, மேலதிக செயலாளர் பொறியியலாளர் சாலிந்த பண்டார, கல்வி மற்றும் பயிற்சிகள் பணிப்பாளர் வைத்தியர் சமந்த ரணசிங்க, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான ஆர். முரளீஸ்வரன், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.














