அநுராதபுரம் போதனா வைத்தியசாலையை நாட்டின் தேசிய வைத்தியசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் என்.சீ.டீ. ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு மேலும் விரிவானதும் உயர்தரமானதுமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை ஏற்கனவே அனைத்து முக்கிய வசதிகளையும் கொண்ட பிரதான வைத்தியசாலையாக விளங்குவதுடன், உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினருக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்காற்றிய வைத்தியசாலையாகவும் இருந்துள்ளது.
இந்நிலையில், அதன் மருத்துவ சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 3,545 மில்லியன் ரூபா செலவில் எட்டு மாடிகளைக் கொண்ட இருதய நோய் மற்றும் இருதய–மார்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவு கட்டிடமும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய வைத்தியசாலை அந்தஸ்தைப் பெறுவதன் மூலம் அநுராதபுரம் மட்டுமன்றி வடமத்திய மாகாணத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த மக்களுக்கு மேலும் பல விசேட மருத்துவ சேவைகளை தமது பிராந்தியத்திலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.










