2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோட்டை இலக்கம் 1 நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவைச் சந்தேகநபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் செய்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த கருத்தில்கொள்ளல்களுக்கு அமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்வனவு தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
































