“நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், நீதிபதிகளின் வீடுகளுக்குச் சென்று கற்களை எறிந்து அச்சுறுத்திய வரலாறே இங்குள்ளது. ரணில் விக்ரமசிங்கவும் அதற்குரிய ஒருவராவார். அவர்களே தற்போது எங்களுக்கு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்து கற்பிக்க வருகிறார்கள். ஜனநாயகம் மறுக்கப்பட்டமையால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட அரசியல் இயக்கம் நாங்கள்தான். அதனால் ஜனநாயகத்தின் பெறுமதியும் ஜனநாயகம் என்றால் என்ன என்பதும் எமக்கு நன்றாகவே தெரியும். ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களின் விருப்பமல்ல, பொதுமக்களின் தேவையாகும். பொய் சுதந்திரமோ அல்லது ஆட்சியாளர்களுக்கான சலுகைகளோ எமது ஜனநாயகமல்ல, மாறாக மக்களுக்குச் சலுகைகள், மக்களுக்கு நீதி மற்றும் உண்மையை தெளிவுபடுத்துவதே எமது ஜனநாயகமாகும்,” என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மைகள்” எனும் தலைப்பில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய டில்வின் சில்வா:
மக்கள் ஆணையைக் காத்தல்: “முன்பு நாம் எமது அரசாங்கத்தை உருவாக்குவது பற்றி பேச ஒன்றுடினோம். ஆனால் இன்று எமது அரசாங்கத்தைப் பற்றி பேச ஒன்றுகூடியுள்ளோம். இது NPPயின் அரசாங்கம் மட்டுமல்ல, இந்நாட்டு மக்கள் அனைவரினதும் அரசாங்கமாகும். அரசாங்கத்தின் மக்கள் ஆணை காலாவதியாகிவிட்டதாகக் கூறும் சிதைவடைந்த எதிர்க்கட்சியினருக்கு, இங்கு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களே உண்மையான பதிலாவர்.”
தேசிய ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கம்: “கடந்த காலங்களில் வடக்கிலோ கிழக்கிலோ மக்கள் ஆட்சியமைக்க வாக்களிக்கவில்லை. மாறாக எம்பிக்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்தே அரசாங்கத்துடன் இணைத்துக் கொண்டனர். ஆனால் இம்முறை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட நாடு முழுவதும் மக்கள் மாளிகாவிற்கு (NPP) வாக்களித்து தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.”
சட்டத்தின் ஆட்சியும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமும்: “நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்து, மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளோம். சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் சொல்லால் மட்டுமன்றிச் செயலாலும் நிரூபித்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதியோ, முன்னாள் அமைச்சரோ யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே செயற்படுத்தப்படுகிறது.”
அரசியல் பழிவாங்கல் இல்லாத புதிய கலாச்சாரம்: “எதிர்க்கட்சியினர் எம்மீது அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். ஆனால் எவரேனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டாலோ தண்டனை பெற்றாலோ அதைத் தீர்மானிப்பது நீதிமன்றமே தவிர நாமல்ல. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை வீதியில் வைத்துப் படுகொலை செய்தும், பிரகீத் எக்னெலிகொடவைக் காணாமல் ஆக்கியும், ஊடக நிறுவனங்களுக்குத் தீவைத்தும் வீதியிலேயே தீர்ப்பு வழங்கிய வரலாற்றைக் கொண்டவர்களே இன்று எமக்கு ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றனர்.”
பொருளாதார மேலாண்மையும் சர்வதேச உறவுகளும்: “இயற்கை அசம்பாவிதங்கள் மற்றும் சர்வதேச மோதல்களுக்கு மத்தியிலும், மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசாங்கம் பொருளாதாரத்தை முறையாக மேலாண்மை செய்து வருகிறது. அத்துடன், சர்வதேச நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர உறவுகளைப் பேணி, தெற்காசியாவிலேயே அனைத்து நாடுகளினாலும் நேசிக்கப்படும் நாடாக இலங்கையை மாற்ற முடிந்துள்ளது.”
“கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் அடைந்த வெற்றிகளைப் பாதுகாத்து, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் இலக்கை எட்டும் வரை மக்கள் சக்தியுடன் நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
























