புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வெளியேறும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 50 தொழினுட்ப பல்கலைக்கழகங்கள் புதிதாக அமைக்கப்படும் – ஜனாதிபதி

AKD 2026.09.12 (1)

புதிய கல்வி சீர்திருத்தங்கள் 06ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனடிப்படையில் 2034ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 50 புதிய தொழினுட்ப பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் கைத்தொழில், சுற்றுலா மற்றும் தொழினுட்பத் துறைகளுக்குத் தேவையான திறமைமிக்க புதிய மனிதவளம் உருவாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மைகள்” எனும் தலைப்பில் கடந்த 12ஆம் திகதி பொலன்னறுவையில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க:

மக்களின் அரசாங்கம்: “இலங்கை வரலாற்றில் முதன்முறையாக குடும்ப ஆதிக்கமோ, அதிகளவிலான பணபலமோ, ஊடக பலமோ இன்றி நாட்டின் சாதாரண பொதுமக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கமே இதுவாகும். நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை ஆசனங்களை வழங்கி மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம்.”

பொருளாதார ஸ்திரத்தன்மை: “நாங்கள் ஆட்சியேற்றபோது முடங்கிக்கிடந்த பொருளாதாரத்தையே பொறுப்பேற்றோம். நிலவிய வீழ்ச்சியிலிருந்து மீண்டு, இன்று பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம். மத்திய கிழக்கு யுத்தம், டித்வா (Ditwa) சூறாவளி போன்ற பாரிய சவால்கள் ஏற்பட்டபோதிலும் மக்கள் மீது சுமை ஏற்றப்படாமல் நிர்வகிக்கப்பட்டுள்ளது.”

விவசாயத் துறைக்கான சலுகைகள்: “விவசாயிகளுக்கான உர மானியம் 15,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. இம்முறை நெல் பயிரிடுபவர்களுக்கு மட்டுமன்றி மேலதிக பயிர்ச் செய்கைகளுக்கும் உர மானியம் விரிவாக்கப்படும். அத்துடன், நீர்ப்பாசன மற்றும் குளங்கள் புனரமைப்பிற்காக வரலாற்றில் இல்லாத அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

அரசு சேவை நியமனங்கள்: “கடந்த பல ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த அரசு சேவைக்கான நியமனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவைக்கு 23,000 பேரும், பொலிஸ் சேவைக்கு 10,000 பேரும் அடங்கலாக மொத்தம் 1,21,000 பேரை அரசு சேவையில் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனங்கள் அனைத்தும் அரசியல் கடிதங்களின்றி பரீட்சைகள் மூலம் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறும்.”

கல்வி மறுசீரமைப்பு: “50 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள தோ்ச்சியடையாத சிறிய பாடசாலைகளுக்குப் பதிலாக, குறைந்தபட்சம் 500 மாணவர்களுடனான விளையாட்டு மற்றும் கலை வசதிகள் கொண்ட பெரிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும். 6ஆம் தரத்திலிருந்து புதிய கல்வி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.”

சட்டமும் ஒழுங்கும்: “பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வலைப்பின்னல்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 70க்கும் மேற்பட்ட பாதாள உலகத் தலைவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற்று வருவதுடன், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.”

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்