நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு முதன்முறையாக பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விலங்கியல் விஞ்ஞானிகளால் இந்தப் பூனைக்கு Leopardus tilcayo எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1.5 கிலோகிராம் எடையைக் கொண்ட இந்தப் பூனைகள், காடழிப்பினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மிகவும் ஈரப்பதம்மிக்க மலைப்பகுதியான பொலிவியாவின் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. உருண்டையான காதுகள், புள்ளிகளைக் கொண்ட தோல் மற்றும் 45 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்தச் சிறிய காட்டுப்பூனை உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்கள் மற்றும் விலங்கியல் விஞ்ஞானிகளிடையே பெரும் உரையாடலை ஏற்படுத்தியுள்ளது.
டி.என்.ஏ (DNA) மரபணு பகுப்பாய்வுகளின் மூலம், பொலிவியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கு இனம் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏனைய இனங்களிலிருந்து பிரிந்த ஒரு தனித்துவமான பரம்பரையைச் சேர்ந்தது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிவியாவின் தலைநகரான லா பாஸ் (La Paz) அருகில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பூனையை, சாதாரண வீட்டுப்பூனை எனத் தவறாகக் கருதி வீட்டிற்கு எடுத்துச் சென்ற கிராமத்துக் குடும்பமொன்று, அதற்கு ஏனைய வீட்டு விலங்குகளுக்கு வழங்கும் உணவுகளை வழங்கியுள்ளது. எனினும், காலப்போக்கில் விலங்கின் நடத்தை மாற்றமடைந்து வீட்டிலிருந்த கோழிகள் மற்றும் முயல்களை வேட்டையாடத் தொடங்கியதையடுத்து, அது விலங்கு பாதுகாப்பு நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மையம் விலங்கைப் பொறுப்பேற்ற பின்னர், ஆராய்ச்சி விலங்கியலாளர் ஒருவரால் இது ஒரு புதிய இனம் என அடையாளம் காணப்பட்டது.
“புதிய பூனை இனத்தைக் கண்டுபிடிப்பது என்பது உங்கள் சிறுவயது காலத்திற்கு மீண்டும் செல்வதைப் போன்றது. அது எங்கு வாழ்கிறது, என்ன செய்கிறது என்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள்; அதைப் பார்க்கவும் விரும்புகிறீர்கள். இதுபோன்ற விஷயங்களைப் பற்றிய ஆர்வத்தை நாங்கள் எப்போதும் விலங்கு ஆர்வலர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இந்த விலங்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பொலிவியாவில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அபூர்வ புதிய இனமாகும்” என உயிரியலாளரான பாவோலா நோகலெஸ்-அஸ்காரன்ஸ் (Paola Nogales-Ascarrunz) வலியுறுத்துகிறார்.
Leopardus tilcayo எனும் இந்த பூனை இனத்தில் உலகில் இன்னும் எத்தனை எஞ்சியுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிவில்லை. உலகம் முழுவதிலும் இதுவரை சுமார் 40 காட்டுப்பூனை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட Leopardus tilcayo வைப் போலவே, அவற்றில் பெரும்பாலானவை அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இதற்கு முன்னர் இறுதியாக 1923 ஆம் ஆண்டிலேயே உருகுவேயின் பம்பாஸ் பூனை (Uruguay Pampas cat) கண்டுபிடிக்கப்பட்டது.
“மனிதனின் கண்ணில் படாத, கண்டுபிடிக்கப்பட வேண்டிய பெருமளவிலான பல்லுயிர்ப் பெருக்கம் உலகில் இன்னும் உள்ளது. இந்த புதிய இனங்களை அடையாளம் காண்பது அவசரமானதாகும், ஏனெனில் அவை அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன; நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்திலும் அவை மறைந்துவரும் விலங்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன” என ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தின் (University of Antwerp) உயிரியலாளரான ஜோனாஸ் லெஸ்க்ரோஆர்ட் (Jonas Lescroart) எச்சரிக்கிறார்.
“தெளிவாக இது இந்த நூற்றாண்டில் இடம்பெற்ற மிகவும் முக்கிய மைல்கல் நிகழ்வாகும். ஏனெனில் 100 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் புதிய காட்டுப்பூனை பற்றி விவரிக்கப்படவில்லை. தில்காயோ (Tilcayo) சாதாரண வீட்டுப்பூனையை விட சற்று சிறியது, உருண்டையான காதுகள் மற்றும் புள்ளிகள் நிறைந்த தோலைக் கொண்டது. இந்த இனம் இதுவரை பொலிவியாவில் மட்டுமே அடையாளம் காணப்பட்ட, நேரடியாகவே அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு விலங்கு இனமாகும்” என பொலிவியாவின் தேசிய புவியியல் ஆய்வாளரான பாவோலா நோகலෙஸ்-அஸ்காரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் தென்னமெரிக்காவிலிருந்து வந்த சிறிய புள்ளிகளைக் கொண்ட பூனைக் குழுவான புலிகாட்டினப் குடும்பத்தைச் சேர்ந்த (Tiger-cat family) இந்த விலங்கு, ஒரு இரகசிய அல்லது மாய இனம் (cryptic species) எனப் புகழ்பெற்றது. அதாவது, அவற்றின் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திப்பார்ப்பது மிகவும் சிக்கலானது என விலங்கியல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பூனைகளின் உணவுப் பழக்கம், அவை எவற்றை வேட்டையாடுகின்றன, எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் காடுகளில் அவற்றின் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்கள் குறித்து ஆராயப்பட வேண்டிய விவரிக்க முடியாத நடத்தை முறைகள் இன்னும் எஞ்சியுள்ளன.
இந்த புதிய பூனையை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்ட முறைகள் மூலம் உலகெங்கிலும் உள்ள மேலும் பல பூனை இனங்களைக் கண்டறிவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்குமான புதிய வழிகளை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
இயற்கை உலகில் அவை ஏற்படுத்தும் ஆழமான தாக்கம் காரணமாக, புலிகள் உள்ளிட்ட இந்த பூனைக்குடும்ப விலங்குகள் பெரும்பாலும் சூழலியல் போர்வீரர்கள் (ecological warriors) என அழைக்கப்படுகின்றன. காடுகளின் பரந்த பகுதிகளில் இயற்கை சூழல் சமநிலையைப் பேண அனுமதிக்கும் பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்களில் வாழ்வதன் மூலம், பூமியில் கார்பன் டை ஆக்சைடைக் குறைக்க (carbon reduction) இவை உதவுகின்றன.
விலங்கியல் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த பூனையின வேட்டையாடிகள் மான்கள் போன்ற பெரிய தாவரவுண்ணிகளை வேட்டையாடுகின்றன. இது அளவுக்கு அதிகமான புல் மேய்வதைத் தடுப்பதுடன், மரங்கள் மற்றும் தாவரங்கள் முழுமையாக வளர்வதற்கும் மேலும் அதிக கார்பனை உறிஞ்சுவதற்கும் வழியமைக்கின்றது.