லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (25) பிற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான சிராணி லக்மந்தி ஹெனரத் ஹெட்டியாரச்சி, எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அஸங்க எஸ். போதரமை முன்னிலையில் இவர் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது 16 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான பிறிதொரு லஞ்ச வழக்கில் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, மேல் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெலவுக்கு செல்வாக்குச் செலுத்த முயற்சித்துள்ளார். இதற்காக, அக்காலப்பகுதியில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஊழியராக (ஆரச்சி) கடமையாற்றிய கலகெதர ஆரச்சிலாகே சரித் குமார என்பவருக்கு 750,000 ரூபாவை லஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நீதிமன்ற ஊழியரும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் மேல் நீதிமன்றத்தின் புத்தகப் பிணைப்பாளர் ஒருவரும் அத்தனகல்ல நீதிமன்ற அதிகாரியொருவரும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சந்தேகநபரான நீதிமன்ற ஊழியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், சரண குணவர்தனவின் தரப்பிலிருந்து குறித்த ஊழியரின் வங்கிச் கணக்குகளுக்கு பல சந்தர்ப்பங்களில் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரண குணவர்தன அபிவிருத்தி அதிர்ஷ்டலாப சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், எந்தவொரு தேவையும் இன்றி தனது மனைவியின் மாதிவல வீட்டை போலியான முறையில் வேறொருவரின் பெயருக்கு மாற்றி, மீண்டும் அபிவிருத்தி அதிர்ஷ்டலாப சபைக்கே குத்தகைக்கு விட்டதன் மூலம் 2 மில்லியன் ரூபா முறைகேடு செய்தமை தொடர்பான வழக்கில் தமக்கு விதிக்கப்படவிருந்த தண்டனையைக் குறைத்துக்கொள்வதற்காகவே இந்த லஞ்சக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.










