யாழ்., வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து அவசர ஆலோசனை

image_2026-08-06_101221289

வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான விசேட அவசரக் கலந்துரையாடல் நேற்று (05) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கோரிக்கையின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் மற்றும் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலுக்குப் பின்னர் அமைச்சர் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில், தென்னிலங்கை சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் இயங்கி வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

சிறியளவில் நெரிசல் காணப்பட்டாலும் அதைக் குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கைதிகளுக்குத் தொழிற்கல்வி, கல்வித் தொடர்ச்சி, நூலக வசதி மற்றும் கணினிப் பயிற்சி உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதால், இச்சிறைச்சாலைகள் ‘கலாசாலைகளைப் போல்’ மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் பிற சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைகளை கருத்தில் கொண்டு, வட மாகாண சிறைச்சாலைகளிலும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்