தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பொதுமக்கள் நலனைக் கருத்திற் கொண்டு இந்த மனுவைத் தாக்கல் செய்வதாகக் கூறி, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜெயதிலக்க என்பவரே இம்மனுவைச் சமர்ப்பித்திருந்தார். இவர் சுரேஷ் சலே சார்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) முன்னால் வருகை தந்து, வீதியில் நாய் போன்று உணவை (சோற்றை) உட்கொண்டு காட்டியிருந்தார். விமானப்படை பதக்கங்களை அணிந்தவாறு இவ்வாறானதொரு செயலில் ஈடுபட்டமை தொடர்பில் அவருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனப் பலத்த மக்கள் அபிப்பிராயம் எழுந்திருந்தது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மனு எந்தக் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதியரசர்கள் குழாம் கேள்வி எழுப்பியதுடன், அதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டப்பூர்வமான அடிப்படையைச் சமர்ப்பிக்கத் தவறியதால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.








