புத்தகங்களுக்கான VAT வரியில் மாற்றம் வரப்போகிறதா? பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்!

Harini Amarasuriya 2026.09.25 (1)

வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் (Budget) புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மதிப்புக்கூட்டப்பட்ட வரி (VAT) தொடர்பில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் 27 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை, இன்று (25) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் நடத்திச் செல்லப்படும் ‘தரு திரி’ (Daru Diriya) புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் இதன்போது நடைபெற்றது.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியில் விசேட மாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்குமாறு ஜனாதிபதி தமக்கு விசேடமாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

புத்தகங்களின் மதிப்பை அறிந்த அரசாங்கம் என்ற வகையில், இவ்வாறானதொரு மாற்றம் மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அரசாங்கம் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி என்பது ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சாதாரண கண்காட்சி மட்டுமல்ல என்றும், அது இந்நாட்டின் இலட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்திருக்கும் பண்பாட்டு வாழ்க்கையின் ஒரு அங்கமாகும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் வாசிப்புப் கலாச்சாரத்தைப் போஷித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வாசிப்பு என்பது மற்றொருவரின் வாழ்க்கை, சமூகம், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களைப் புரிந்துகொள்வதாகும் என்றும், அனுதாபமும் கருணையும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப அது பெரிதும் உதவுகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகப் பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிப்பதுடன், பாடசாலை நேரத்தினுள் வாசிப்பிற்காக அதிக நேரத்தை ஒதுக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் சுபசிங்க, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அதுல ஜெயக்கொடி உள்ளிட்ட எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் பெருந்திரளான அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்