இன்று (25) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அமைப்புக் கட்டளை சட்டமூலத் திருத்தம் (Judicature Amendment Bill) விசேட பெரும்பான்மை வாக்களிப்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சட்டமூலத் திருத்தத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, இத்திருத்தத்திற்கு ஆதரவாக 95 மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளதுடன், விசேட பெரும்பான்மைக்குத் தேவையான 150 வாக்குகளையும் தாண்டி வாக்குகள் அளிக்கப்பட்டன.
இத்திருத்தத்தின் மூலம் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது திருத்தத்திற்கு உட்படுத்தப்படுவதுடன், அனைத்து நீதிபதிகள் மற்றும் மேஜிஸ்திரேட்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக உயர்த்துவதற்கும் இதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பும் மேற்கூறியவாறே விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










