அக்குரஸ்ஸ: “இந்த அரசாங்கம் பழைய பாதையிலேயே தொடர்வதற்காக கட்டியெழுப்பப்படவில்லை. ஒரு மாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும், பழைய அரசாங்கத்தில் வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகளை அனுபவித்த குழுவினர், இந்த மாற்றங்களைக் கண்டு கலக்கமடைந்துள்ளனர்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
“எங்கள் அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்குச் சுபிட்சம்” எனும் கருப்பொருளில் அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று (21) நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
மக்களின் பலமே ஆட்சியின் உண்மையான சக்தி
“எமது அரசாங்கம் உருவாக்கப்பட்டு நாளைக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, நாடாளுமன்றப் பெரும்பான்மை மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரம் என வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசாங்கமும் பெற்றிராத மிக பலமான அதிகாரப் பலம் எம்மிடம் உள்ளது. ஆனால், வெறும் சட்டப்பூர்வ அதிகாரங்களை விட, மக்களிடம் இருக்கும் ஆதரவும் நம்பிக்கையுமே இந்த ஆட்சியை உண்மையாகவே பலப்படுத்துகிறது.”
ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கை வேகப்படுத்தப்படும்
“இலங்கை அரசியலில் ஊழல் ஒழிப்பு என்பது வெறும் மேடைப் பேச்சாகவே இருந்தது. ஆனால், இன்று அது நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமும், அரசியல்வாதிகளுக்கு வேறு சட்டமும் என்ற நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஊழல்வாதிகள் அச்சமடைந்து ஒன்றிணைந்து வருகிறார்கள்.”
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு
“போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தியின் இலக்காகும். போதைப்பொருள் வியாபாரிகளால் போஷிக்கப்பட்ட ஆயுதமேந்திய குழுக்களையும், அவர்களின் அரசியல் ஆதரவாளர்களையும் முடக்கும் போது, அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட முயற்சிக்கின்றனர்.”
ஜனநாயகமும் ஊடகச் சுதந்திரமும் உறுதியளிக்கப்படும்
“கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்கள் மீது குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டன; ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் எமது அரசாங்கம் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையோ அல்லது நீர்ச்சாரை பிரயோகத்தையோ பயன்படுத்தவில்லை. கருத்துச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.”
மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு
எண்ணெய் மற்றும் மின்சார மானியம்: உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்தபோதிலும், டீசல் லீட்டர் ஒன்றுக்கு அரசாங்கம் 100 ரூபா வீதம் 6,000 கோடியை மானியமாகப் பொறுப்பேற்றுள்ளது. மின்சாரக் கட்டண உயர்வின் சுமையைக் குறைக்க 1,500 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அரச துறை வேலைவாய்ப்பு: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தேவைகளின் அடிப்படையில் 1,20,000 பேர் அரச சேவையில் முறைப்படி இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு உதவி: பராமரிப்பாளர்கள் அற்ற குழந்தைகளுக்கு 18 வயது முதல் 21 வயது வரை மாதம் 5,000 ரூபா சேமிப்புக் கணக்கில் வைப்பு வைக்கப்படுவதுடன், அவர்கள் வெளியேறும் போது வீடு கட்டிக் கொள்ள 20 லட்சம் ரூபா வழங்கப்படும்.
கல்வி மற்றும் சுகாதார மறுமலர்ச்சி: நிஸ்ஸங்க கல்விப் பீட ஆசிரியர்களின் கொடுப்பனவு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இரட்டிப்பாக்கப்படும். ‘ஆரோக்கியா’ திட்டத்தின் மூலம் இலவசச் சுகாதார சேவை மேலும் வலுப்படுத்தப்படும்.
“கடந்த தேர்தலில் எமக்கு வாக்களித்த அனைவரும் இன்று பெருமையுடன் வீதியில் இறங்கி ‘நாம் மாளிமாவிற்கு (திசைகாட்டி) வாக்களித்தோம்’ என்று தலைநிமிர்ந்து கூறக்கூடிய வகையில் வெளிப்படைத்தன்மையான, சுபிட்சமான எதிர்காலத்தை நோக்கிய ஆட்சியை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

























