இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, நேற்று (01) பிற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இதன்போது, கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சந்திப்பையும் நினைவுகூர்ந்ததுடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நல்லுறவு மற்றும் வலுவான அடிப்படையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, தொழில்நுட்ப முன்னேற்றம் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அரசியல் கட்சிகள் என்ற வகையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர் சமூகத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவதன் அவசியம் குறித்தும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இந்த நோக்கங்களை அடைவதற்காக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலும், இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் மக்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்காக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பில் செலுத்தப்படும் கவனம் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மேலும், உலகளவில் அதிகரித்து வரும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கையில் இந்திய முதலீடுகளுக்குக் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.























