சட்டவிரோத நிதி குற்றங்களை மறைப்பதற்கான போலி வணிக நடவடிக்கை ஒன்றுக்கு தலைமை தாங்க திருகோணமலையைச் சேர்ந்த ‘ஜூஸ் பார்’ (Juice Bar) கும்பல் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோத நிதி நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி எடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்த கும்பல் மத ரீதியிலான போர்வையில் தலையிட முயல்கிறது. பலங்கொட கஸ்ஸப என்ற தேரர் உள்ளிட்ட குழுவினர் இதன் முதன்மை அமைப்பாளர்களாக செயற்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு பணத்தைக் கொள்ளையடித்து நாட்டை திவாலாக்கியமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை காலம் குரல் கொடுத்து வந்த இந்த ‘ஜூஸ் பார்’ கும்பல், தற்போது ஏனைய நிதி குற்றவாளிகளுக்காகவும் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்களின் பணத்தை நேரடியாக வைப்புகளாகப் பெற்றுக்கொள்ளும் மோசடி வணிகங்களுக்கு “சிங்கள பௌத்தம்” என்ற லேபிளை ஒட்டி, தீவிரவாதப் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.










