“2015 ஆம் ஆண்டில் அப்போது நிலவிய ராஜபக்ஷ ஆட்சி சீரழியக் காரணமாக அமைந்த இந்த தனித்துவமான விடயங்கள், அவை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள விதப்புரையை வழங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி மக்களுக்கு ஒன்றுமே தெரியாது. எனவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு இந்த அறிக்கையை குப்பைத்தொட்டிக்குள் போட்டு மறைக்க உரிமையில்லை.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று (28) பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
சனவரி 15 ஆந் திகதி சனாதிபதி கோட்டபய ராஜக்ஷவினால் அமைச்சரபை் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்கொலைகள் பற்றிய வழக்குகள், ஆட்கடத்தல்கள் பற்றிய வழக்குகள், நிதிசார் குற்றச்செயல்கள் பற்றிய வழக்குகள் என்பவற்றை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவிப்பதே அதன் நோக்கமாக அமைந்தது. உதயங்க வீரதுங்கவின் மிக் தாக்குதல் வானூர்திகள் வழக்கு, உதய கம்மன்பிலவின் நிதி மோசடி வழக்கு, பசில் ராஜபக்ஷ திரு நடேசன் மல்வானை வீடு பற்றிய வழக்கு, சீ.எஸ்.என். அலை வரிசையை தொடங்க நிதி திரட்டல் பற்றிய யோஷித ராஜபக்ஷவின் வழக்கு, அமெரிக்காவில் தூதரகமொன்றை கொள்வனவு செய்தல் பற்றிய ஜாலிய விக்ரமசூரிய வழக்கு, செலாவணி ஆணைக்குழுவுக்குச் சொந்தமான பணத்தை தாருண்யயட்ட ஹெடக் அமைப்பிற்கு வழங்குதல் பற்றிய நாலக்க கொடஹேவா வழக்கு, கப்பம் பெற்றுக்கொள்வதற்காக 11 பிள்ளைகளை கடத்திச்சென்று படுகொலை செய்தமை பற்றிய வழக்கு, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை பற்றிய பிள்ளையான வழக்கு, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கு, லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு, போத்தல ஜயந்த, உபாலி தென்னக்கோன், கீத் நெயார் போன்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஆட்கடத்தல் பற்றிய வழக்கு, அரச நிதி முறைகேடான பாவனை பற்றிய வழக்கு, அவன்காட் வழக்கு போன்ற பெருமளவிலான வழக்குகளை வாபஸ் பெறுதல் பற்றி சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவிக்க அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் என்னை உள்ளிட்ட 2 பேருக்கு அரசியலமைப்பினை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவை பற்றி புலனாய்வு செய்வதற்காக மேலுமொரு விசேட சனாதிபதி ஆணைக்குழு கடந்த சனவரி 29 ஆந் திகதி நிறுவப்படுகின்றது. அந்த ஆணைக்குழுவிற்கு ஒருமாதம் கழிந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கை சனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு அதனையும் மறைத்துவைக்க முயற்சி எடுக்கப்பட்டதோடு கர்தினால் ஆண்டகையின், ஏனைய அரசியல் கட்சிகளின் மற்றும் ஊடகங்களின் அழுத்தம் காரணமாக அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டி நேரிட்டது. அந்த அறிக்கையின் ஏறக்குறைய ஆறு தொகுதிகள் உள்ளதோடு முதலாவது தொகுதி மாத்தரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை பற்றி இற்றைவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பாரிய பிரயத்தனத்தின் பின்னரே சட்டத்துறை தலைமை அதிபதிக்கும் அதன் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ள இயலுமாயிற்று. உயிர்த்த ஞாயிறு அறிக்கைக்கு அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளவேளையில் அரசியல் பழிவாங்கல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டு அமைச்சரவைத் தீர்மானத்தை மேற்கொண்டு ஊழல்பேர்வழிகளை வழக்குகளிலிருந்து விடுதலை செய்விக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இந்த அறிக்கை என்னையும் பிரதிவாதியாக்கியுள்ள அறிக்கையின் விதப்புரைகள் அமுலாக்கப்பட்டு வருகின்ற இந்த நாட்டின் பெருந்தொகையான குற்றச்செயல்கள், ஆட்கடத்தல்கள், படுகொலை செய்தல்கள், கொள்ளையடித்தல்கள் பற்றிய வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளல் பற்றிய விடயங்களை உள்ளடக்கிய விசேடமன அறிக்கையாகும். எனவே கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதென்பதை அறிந்துகொள்வதற்கான தார்மீக உரிமை கிடையாதா? பொதுமக்களின் ஆதனங்களைத் திருடிய ஊழல்பேர்வழிகின் வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொள்ள விதப்புரை செய்யப்படுகின்ற அறிக்கை பற்றி அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை கிடையாதா? கீத் நெயார், போத்தல ஜயந்த, உபாலி தென்னக்கோன் போன்ற ஊடகவியலாளர்களைப் போன்றே ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை கிடையாதா? எக்னெலிகொடவினை கடத்திச்சென்று காணாமல்போகச் செய்வித்தமை தொடர்பாக அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் பற்றி அறிந்துகொள்ள அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உரிமை கிடையாதா?
இனிமேலும் இந்த அறிக்கையை மறைத்துவைக்க கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது. ராஜபக்ஷவிற்கு நியாயமான உரிமை கிடையாது. அந்த அறிக்கையின் விதப்புரைகளை தமக்கு அவசியமானவகையில் அமுலாக்கச் செய்விக்க கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உரிமை கிடையாது. சனாதிபதி தனக்கு பரம்பரை வழியாக கிடைத்த அரச மணிமுடிக்கு உரித்தான ஒருவரல்ல என்பதையும் இந்த நாட்டுப் பிரசைகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஓர் ஆள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எம்மீது தொடுக்கப்படுகின்ற பொய்க் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நாங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் எமக்கு ஒரு நியாயமான உரிமை இருக்கின்றது இந்த குற்றச்சாட்டுகள் பற்றி அறிந்துகொள்ள. அதைப்போலவே எங்களுக்கு இந்த அறிக்கை தொடர்பில் ஓர் ஆர்வமும் சந்தேகமும் உள்ளது. பொலீசார், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் ஆகிய ஒழுங்கமைந்த நிறுவனம்சார் செயற்பாங்கிற்கு முகங்கொடுக்க நாங்கள் தயார். நாங்கள் குற்றஞ்செய்த, பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் அல்ல. நாங்கள் ஏனைய ஆட்களைப்போன்று வழக்குகளுக்குப் பயந்து சிங்கப்பூருக்கு தப்பியோடுபவர்கள் அல்ல. நோய்வாய்ப்படவும் மாட்டோம். உங்களுக்குத் தெரியும் ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து தற்போது ஒன்றரை வருடங்கள் ஆகின்றது. ஒருநாள்கூட சுகவீனமுற்றதாக நாங்கள் கேள்விப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வழக்குகளுக்குப் பயந்து ஒவ்வொருநாளும் நோய்வாய்ப்படுகிறார். நாங்கள் அதைப்போல நீதிமன்றத்தைத் தவிர்த்துக் கொள்பவர்கள் அல்ல. கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணப்படி கட்டியெழுப்பிய விசித்திரமான ஆணைக்குழுக்களுக்கு கட்டுப்படப்போவதில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மனதிற்கொள்ள வேண்டும். எனவே இந்த அறிக்கையை மக்கள்மயப்படுத்துமாறு நாங்கள் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறோம்.


