Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

இரணைதீவிற்குள் கொழும்பு ஊடகவியலாளர்கள் நுழைய கடற்படை தடை!

05/03/2021 Leave a Comment

மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் கொழும்பின் ஆங்கில ஊடக ஊடகவியலாளர்களை இரணைதீவிற்குள் நுழைய கடற்படையினர் தடை விதித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவில் புதைக்க அரசாங்கம் முயன்று வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய இன்று (5) காலை குறித்த குழுவினர் இரணைமாதா நகரை சென்றடைந்தனர்.
எனினும் அங்கிருந்து இரணைதீவிற்கு நுழைய கடற்படையினர் அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் முறையிட்ட போது, ‘அது பற்றி தனக்கு தெரியாது என்றும் ஆராய்வேன் என்றும்’ தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர், ‘தான் கூட்டம் ஒன்றில் இருப்பதாகவும், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டதாகவும்’ தெரிவித்தார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அப்பகுதி மக்களை மட்டுமே அங்கு செல்ல அனுமதிப்போம் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி : உதயன் 

Filed Under: செய்திகள்

வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும்

05/03/2021 Leave a Comment

 நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும்,

“கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

21 மாவட்டங்களில் கொவிட் தோற்றாளர்கள் – நேற்று பதிவாகியது

05/03/2021 Leave a Comment

கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் நேற்றைய தினம் (04) 21 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 384 பேரில், பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

இரத்தினபுரியில் 64 பேரும், கண்டியில் 35 பேரும், கம்பஹாவில் 21 பேரும், பதுளையில் 19 பேரும், அனுராதபுரத்தில் 18 பேரும், நுவரெலியாவில் 13 பேரும், அம்பாறையில் 13 பேரும் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும்  மட்டக்களப்பில் 12 பேர் வீதமும், மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் 11 பேர் வீதமும், கேகாலையில் 10 பேரும் பதிவாகியுள்ளனர்.

ஹம்பந்தோட்டையிலிருந்து 06 பேரும், குருநாகல், மன்னார், மொனராகலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா 05 பேரும் மற்றும் மாத்தளையிலிருந்து 04 பேரும், களுத்துறையிலிருந்து 03 பேரும் மற்றும் பொலன்னறுவையை சேர்ந்த ஒருவரும் நேற்றைய தினம் நாட்டில் பதிவான தொற்றாளர்களில் உள்ளடங்குகின்றனர்.

மேலும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 33 பேரும் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

05/03/2021 Leave a Comment

https://lankatruth.com/ta/?p=562

Filed Under: Uncategorized

ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை – துப்பாக்கியை நீட்டுகிறது மியன்மார் இராணுவம்

05/03/2021 Leave a Comment

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிவரும் போராட்டக்காரர்கள் மீது மியன்மார் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (03) இச்சம்பவம் நடந்துள்ளதுடன், இதுகுறித்த அதிர்ச்சிகரமான காணொளிகளும் வெளிவந்துள்ளன.

இராணுவத்தினர் இறப்பர் குண்டுகளுடன் சேர்த்து உண்மையான குண்டுகளையும் பயன்படுத்தினர் என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர். 

Filed Under: உலகம்

அதிகார வர்க்கத்தை அதிர வைத்த சிவப்பு ரோஜா…. ரோசா லக்ஸம்பர்க் 150 (1871 மார்ச் 5 – 2021 மார்ச் 5)

05/03/2021 Leave a Comment

தோழர் ரோசா லக்ஸம்பர்க் ஒரு சிறந்த மார்க்சிய தத்துவவாதி. மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத் தகுந்த இடத்தை லக்ஸம்பர்க் வகிக்கிறார். மார்க்சியத்திற்குப் பங்களித்த பெண்களில் ரோசா முதன்மையானவர் என்றே கூற வேண்டும். ரோசா லக்ஸம்பர்க்கின் 150 வது பிறந்த தினம் இன்று. 

1871 மார்ச் 5 ஆம் தேதி போலந்து நாட்டில் பிறந்த லக்ஸம்பர்க் பின்னர் ஜெர்மனியின் புரட்சியாளராக திகழ்ந்தார். ஜாரின் ரஷ்ய ஆட்சியால் ஒடுக்கப்பட்ட போலந்து நாட்டவர் என்பதோடு அங்கும்  அம்மக்களால் கீழாக மதிக்கப்பட்ட யூத சிறுபான்மையினராக லக்ஸம்பர்க் இருந்தார். அதோடு, அன்றைய அரசியல் என்பது மிகப் பெரிதும் ஆண்களின் களமாக இருந்த பொழுது அவர் ஒரு பெண்ணாக இருந்தார். ஆனபோதும், கம்யூனிஸ்ட் கட்சி என்று நேரடியாகச் செயல்பட முடியாத சூழலில் போலந்து நாட்டில் சமூக ஜனநாயகக் கட்சியை உருவாக்கியதில் ஒருவராகத் திகழ்ந்தார். ஜெர்மனியில் ‘ஸ்பார்ட்டகஸ் லீக்’ என்கிற அமைப்பை உருவாக்குவதிலும் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.  இவ்வமைப்பே பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்ச்சி பெற்றது. 

சமரசமற்ற உறுதி

ரஷ்ய எல்லைப் பகுதியில்தான் லக்ஸம்பர்க் வாழ்ந்து வந்த கிராமம் அமைந்திருந்தது. ஜார் மன்னனது ரஷ்யப் பேரரசின் தீவிரமான ரஷ்யமயமாக்கல் இயக்கம் போலந்தின் மொழியையும் கலாச்சாரத்தையும் தாக்குதலுக்குள்ளாக்கியது. ரஷ்ய மேலாதிக்கத்திற்கு எதிராகப்போராடியவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவதும், நாடு கடத்தப்படுவதும் நடந்தேறியது. உயர் நிலைப்பள்ளியில் படித்த காலத்திலேயே லக்ஸம்பர்க் தலைமறைவாக பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அவர் ஜூரிச் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். 

பகைமையான ஆதிக்கக் கலாச்சாரத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டே ஒரு புதிய நிலத்திலும் மொழியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். இருபது வயதே ஆன  நிலையில் ஒரு புதிய நாட்டிற்கு வந்து சேர்ந்திருந்த ஒரு பெண்மணியால் ஒரு பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. அங்குதான் அவர் சட்டப் படிப்பைப் பயின்றார். அரசியல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அதிகார வர்க்கத்தை எதிர்த்த அவரது கலக மனப்பாங்கின் காரணமாக அவருக்குரிய தங்கப்பதக்கம் மறுக்கப்பட்டது. எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இந்தப் போக்கு அவரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. குலைக்க முடியாத அவரின் இந்த உறுதித் தன்மைக்கு அஞ்சியவர்களே அவரைப் படுகொலை செய்தனர். 

பாட்டாளி வர்க்க அறிவாற்றல்

கோட்பாடு சார்ந்த சர்ச்சைகள் கல்வியாளர்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற வாதத்தை ரோசா லக்ஸம்பர்க் கடுமையாகச் சாடினார். கோட்பாடுகள் கல்வியாளர்களின் களம் என்று வாதிடுவது தொழிலாளியை கொச்சையாக அவமதிப்பதாகும். இதைவிட கீழ்த்தரமான அவதூறு எதுவும் இருக்க முடியாது என்றார். முதலாளித்துவ கல்வி முறையில் பெறப்படும் கல்வி (அறிவு) என்பது தனி நபர்களின் மேம்பாட்டிற்கானதாக கூறப்படுகிறது. நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், அதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்று வாழ்வில் மேம்படலாம் என்கின்றனர். உண்மையில் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதுமில்லை, வேலையில் உள்ளவர்களும் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களின் உழைப்பும் அறிவாற்றலும் கண்டுபிடிப்புகளும் முதலாளித்துவத்தின் லாபத்திற்கே உறிஞ்சப்படுகிறது என்பதே நிதர்சனமாகும். 

இன்று கல்விப் புலத்தில் உள்ள சமூகவியல், வரலாறு, தத்துவம் என எல்லாமும் முதலாளித்துவ தத்துவார்த்த இயலின் விளைபொருட்களே. முதலாளித்துவத்தின் வர்க்க நலன் மற்றும் தேவைகள் சார்ந்த மனப்பாங்குகளின் வெளிப்பாடாகவே அதன் கல்வி முறையும் அதன் உள்ளடக்கமும் இருக்கின்றன. ஆனால், பாட்டாளி வர்க்கமோ அதன் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் அறிவாற்றல் என்பதை ஒரு சக்தியாக அங்கீகரிக்கிறது. கடின உழைப்பும்,விடா முயற்சியும் மகிழ்வைத் தரும் என்கிற உணர்ச்சியற்ற முதலாளித்துவ தனிமனித வாதத்தைப் பாட்டாளி வர்க்கம் புறம் தள்ளுகிறது. பாட்டாளி வர்க்கம், அறிவாற்றலை தனது வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு நெம்புகோலாகவும் உழைக்கும் மக்களிடம் புரட்சிகர உணர்வை ஏற்படுத்துகிற ஆயுதமாகவும் கருதுகிறது. 

விஞ்ஞான சோஷலிசத்தின் கூர்மையான நம்பிக்கைக்குரிய ஆயுதங்களை உள்ளடக்கிய கோட்பாடு சார்ந்த அறிவினை, மிகப்பெரும் பாட்டாளி வர்க்கம் தனது கையில் எடுத்துக் கொள்ளும்போதுதான் சந்தர்ப்பவாத போக்குகள் எங்கும் இல்லாமல் ஒழிந்துபோகும் என்கிறார் லக்ஸம்பர்க். 

உணர்வுப்பூர்வமான எழுத்து 

சாரமற்ற, இயந்திரத்தனமான எழுத்துக்களைச் சுவையற்ற இயக்கமற்ற அரசியலின் அடையாளமாகக் கருதிய லக்ஸம்பர்க் தனது வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் சோஷலிசத்தின் உயிருள்ள உணர்வுகளை வெளிப்படுத்தினார் என்கிறார் ஹெலன் ஸ்காட்.“கட்டுரைகளை வழக்கமான முறைகளில் எழுதுவதைக்கண்டு நான் அதிருப்தியடைகிறேன். அவர்கள் அந்த அளவிற்குச் சம்பிரதாயமாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் மீண்டும் நீங்கள் அதன் பொருளை வாழ்ந்து பார்க்க வேண்டும். நான் எழுதும் பொழுது நான் என்ன எழுதுகின்றேனோ அதைப் பற்றி உற்சாகமான உணர்வுகளை எனது எழுத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நான் உறுதியாக உள்ளேன்” என லக்ஸம்பர்க் பதிவு செய்கிறார். 

ஆடம்பரமான சொற்களையும் பாவனைகளையும் அவர் சிக்கனமாகவே பயன்படுத்தியதாகவும் அவர் முன்வைக்கும் கருத்தின் உள்ளடக்கத்தின் மூலமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் எப்போதும் புரட்சிப்பொறி பறக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தபோதும் அதில் நிதானமான சிந்தனை கலந்தே இருக்கும் என்றும் லக்ஸம்பர்க் குறித்து ஸ்காட் பதிவு செய்துள்ளார்.

சீர்திருத்தமா? புரட்சியா?

லக்ஸம்பர்க் எழுதிய “சீர்திருத்தமா? புரட்சியா?” என்கிற நூல் அவரின் மிக முக்கியமான பங்களிப்பாகும். புதிய சீர்திருத்தம், சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் என அறியப்பட்டவற்றை ஜெர்மன் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் முன்வைத்த எட்வர்ட் பெர்ன்டின் கருத்துக்களுக்குப் பதில் கூறும் வகையிலேயே இப்புத்தகம் அமைந்தது. இதில் லக்ஸம்பர்க் முன் வைக்கும் கருத்துக்கள் இன்றும் நமக்குப்பல தெளிவினை ஏற்படுத்துகின்றன. “நமது இறுதி இலக்கை சமூக சீர்திருத்தங்களுக்குச் சமமாக முன் வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. சமூக சீர்திருத்தங்களுக்கும் புரட்சிக்கும் இடையில், சமூக ஜனநாயகத்திற்கு ஒரு தவிர்க்கவியலாத பிணைப்பு இருக்கிறது” என்கிறார் லக்ஸம்பர்க். சீர்திருத்தம் பேசுபவர்கள் தங்களை மார்க்சின் சீடராக ஒப்புக் கொள்ளும் அதேநேரம் மார்க்சின் போதனைகளை நாடிச்சென்று அவர் மீதேதாக்குதல் நடத்துவர். அத்தாக்குதலையே மார்க்சியக் கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் முன்வைப்பார்கள் என்கிறார். இதை அப்படியே தற்காலத்தில் அடையாள அரசியலை முன்வைக்கும் கருத்தியலோடு பொருத்திப் பார்த்தால் லக்ஸம்பர்க்கின் கருத்தாழம் நமக்கு விளங்கும். 

‘சீர்திருத்தம்’ பேசுபவர்கள், ஒரு குறிப்பிட்ட வடிவத்திலான வீழ்ச்சியை மட்டும் நிராகரிக்கவில்லை; மாறாக வீழ்ச்சியின் சாத்தியத்தையே நிராகரிக்கின்றனர். அதாவது சமூக எதார்த்தங்களை கணக்கில் கொண்டு மார்க்சியத்தை முன்னெடுப்பதே முதலாளித்துவத்தை வீழ்த்திட உதவும் என்பதை விமர்சனமாக கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்களின் விவாதமோ, இத்தகைய எதார்த்தங்கள் உள்ள நிலையில் மார்க்சியம் ஏற்புடையதல்ல என்கின்றனர். அது வேறுவகையில் அனைத்து விதமான சுரண்டலுக்கும் அடிப்படையாக உள்ள முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் சிந்தனையைக் கொண்டுள்ளதாக அமைந்து விடுகிறது. 

மெய்யான இயக்கவியல்வாதி

ஸ்தாபன அமைப்பு, ஜனநாயகம், தேசியம், ரஷ்யப் புரட்சிக்கு பிறகான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் தோழர் லெனினுடைய கருத்துகளுடன் லக்ஸம்பர்க் முரண்பட்டே நின்றார். அவை கருத்து ரீதியான முரண்பாடாகவே பார்க்கப்பட வேண்டியவையாகும். மாறாக, லக்ஸம்பர்க் லெனினிய விரோதியாக சிலரால் சித்தரிக்கப்பட்டார். ஆனால் உண்மையில், லக்ஸம்பர்க்கும் லெனினும் பல ஆண்டுகள் நெருங்கிய சகாக்களாக இருந்தார்கள். லக்ஸம்பர்க் குறித்து லெனின் கூறுகையில், “உலககம்யூனிஸ்ட்டுகளின் நினைவில் அவர் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் அவரின் நூல்களும் கம்யூனிஸ்ட்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக அமையும்” என்றார். 

லெனினியத்தின் முக்கியமான கூறான ஸ்தாபனம் மற்றும் கட்சி அமைப்பின் அவசியத்தை லக்ஸம்பர்க் மறுதலித்தவர் அல்ல. “சோஷலிஸ்டுகள்தான் பாட்டாளி வர்க்கத்தின் மிகுந்த அறிவொளி பெற்ற மிகமிக வர்க்க உணர்வு படைத்த முன்னணிப் படையினராவர். விதிவிட்ட வழியில் ‘புரட்சிகரச் சூழ்நிலை வருவதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவர்களால் காத்திருக்கவியலாது; காத்திருக்கத் துணியவும் முடியாது” என்று தனது எழுத்துக்களில் லக்ஸம்பர்க் குறிப்பிடுகிறார். ஜார்ஜ் லூக்காஸ் கூறியது போல், “கூர்மையானதும் சிக்கலானதுமான ‘அடிக்கடி எதிரெதிர் யதார்த்தங்களை ஒன்று சேர்த்துப் பிடித்திருந்த’ ஒரு ஆளுமையைக் கொண்டமெய்யான இயக்கவியல்வாதியாக” லக்ஸம்பர்க் இருந்தார். லக்ஸம்பர்க்கிடம் உடன்படுவதற்கும் முரண்படுவதற்கும் பல அம்சங்கள் உள்ளன. வரலாற்றுப் படிப்பினைகள் அவற்றை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. மார்க்சியத்தின் வளர்ச்சி இவ்வாறான கருத்துப் போராட்டங்களின் வழியேதான் சாத்தியமாகிறது.

கட்டுரையாளர் : ச.லெனின், சிபிஐ(எம்) தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்

நன்றி : தீக்கதிர் 

Filed Under: கட்டுரைகள்

வருகிறது வர்த்தமானி… 1000 ரூபாய் கிடைக்கும் (?)

05/03/2021 Leave a Comment

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாட்சம்பள விவகாரம் பல வருடங்களாக இழுபறியில் இருந்ததுடன், கடந்த தினத்தில் சம்பள நிர்ணய சபையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (05) வெளியிடப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் சம்பளம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாது என தொழில் அமைச்சு தரப்பு அறிவித்துள்ளது.

அதேவேளை, சம்பள நிர்ணய சபையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டி.பி.விஜயதுங்கவின் ஆட்சியில் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் சம்பள நிர்ணய சபையில் இருந்து வெளியேறி கூட்டு உடன்படிக்கையை கொண்டுவர செயற்பட்டார். அந்த உடன்படிக்கையில் ஏற்கனவே இருந்த சலுகைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதன்படி கூட்டு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மறுபடியும் அதே இ.தொ.கா தொழிற்சங்கம்  கூட்டு உடன்படிக்கையில் இருந்து வெளியேறி தற்போது சம்பள நிர்ணய சபைக்குச் சென்றுள்ளது. கூட்டு உடன்படிக்கை இல்லாதுபோவதால் சில தொழற்சங்கங்கள் மனம் நொந்துபோயுள்ளதாக அறிய முடிகிறது.

Filed Under: செய்திகள்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு

05/03/2021 Leave a Comment

6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களில் மேலும் 4 வீரர்கள், ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

கொரோனா பரவல் எதிரொலியாக சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப திட்டமிட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியை உடனடியாக தள்ளிவைப்பதாக நேற்று அறிவித்தது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விஷயத்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

Filed Under: ஆடுகளம்

அனைத்து மக்களின் நலன்கருதி செயற்படாத அரசாங்கமே கோட்டாபய அரசாங்கம் . – இரா.சாணக்கியன்

05/03/2021 Leave a Comment

இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் நலன்கருதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் செயற்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் (04) தமிழ்ப் பத்திரிகையொன்றிற்கு வழங்கியிருந்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கம் எந்தவொரு திட்டமும் இல்லாத அரசாங்கம் ஆகும். எந்த மக்களின் நலன்கருதியும் செயற்படவில்லை. அதாவது சிங்கள மக்களுக்கு அத்தகைய சிந்தனை வரக்கூடாது என்பதற்காக தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிரானதொரு அரசாங்கமாகச் செயற்படுகிறது. இந்த அரசாங்கமானது நாட்டில் வாழும் எந்த மக்களுக்கும் எந்தவொரு நன்மையையும் செய்யாத அரசாங்கம் என்பது தான் உண்மையாகும்.” என்றார்.

Filed Under: செய்திகள்

யாருக்கு முன்னுரிமை? இலங்கையில் தடுப்பூசி விவகாரம்… 2 வயது குழந்தைக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாம்…

05/03/2021 Leave a Comment

நாட்டில் வயதானவர்கள் மற்றும் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் வழங்கப்படாத நிலையில், நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

குறித்த பிரமுகர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவரின் தகவலை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, தாயிக்கு தெரிந்த நபரினூடாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள சம்பவமும் இலங்கையில் பதிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதுடன், உலக சுகாதார ஸ்தாபனம் அது தொடர்பில் தெளிவுபடுத்தல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உதவித் திட்டங்களுக்கு அமைவாக இலவசமாக நாட்டுக்கு கொவிஸீல்ட் தடுப்பூசி கொண்டுவரப்பட்டது.

இதனைத் அடுத்து கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்ததாக 30 முதல் 60 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், நாரேஹேன்பிட்ட பகுதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இதன்போது, தடுப்பூசிகளை வழங்குவதில் முறையான நடைமுறைகள் செயற்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 586
  • 587
  • 588
  • 589
  • 590
  • …
  • 605
  • Next Page »

Recent Posts

  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதிலிருந்து எதிர்க்கட்சியின் சில கட்சிகள் விலகல்!
  • ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
  • தலதாவின் கருத்து முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தியின் மருத்துவ நிலை குறித்த புதிய உண்மைகள்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.