முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளி நெரிசலைக் குறைக்கும் நோக்கில், புதிய 4 மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ரூ. 600 மில்லியன் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய வார்டு தொகுதி லிஃப்ட் (Elevators), ஏர் கண்டிஷனிங் அமைப்புகள், அவசர மின் உற்பத்தி இயங்கி, தீயணைப்பு அமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ வாயு விநியோக அமைப்பு (Piped medical gas supply system) போன்ற பல நவீன வசதிகளையும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளையும் கொண்டதாக அமையவுள்ளது.
தொற்றா நோய்களால் ஏற்படும் அகால மரணங்களைக் குறைப்பதும், 35 வயதிற்கு மேற்பட்ட நபர்களைப் பரிசோதிக்கும் வீதத்தை கணிசமாக அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் நோயாளிகள் பிற வைத்தியசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து புதிய வார்டு தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.
நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ:
“நமது நாட்டில் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மிகக் குறைந்த கட்டில் கொள்ளளவு கொண்ட வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகிறது. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை உருவாக்கும் போது, இந்நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அதற்கு அமைவாக இவ்வைத்தியசாலைக்குத் தேவையான கட்டிட வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய நியமனங்களின் கீழ் தேவையான ஊழியர்களும் படிப்படியாக வழங்கப்படுவார்கள்.
மூன்றாம் நிலை வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலையில் நிபுணத்துவ மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பயிற்சி மருத்துவர்களை (Intern Doctors) இணைப்பதிலும் எல்லைகள் உள்ளன. எனவே, வெளிநாட்டுப் பயிற்சியை முடித்துத் திரும்பும் நிபுணத்துவ மருத்துவர்களை வைத்தியசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் போது முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த வைத்தியசாலையின் கட்டில் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 4 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தைக் கட்டுவதற்கு ரூ. 600 மில்லியன் நிதியுதவி வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பாதுகாப்புப் படைப் பிரதானிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.









