சுமார் 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்த திட்டமே இன்று நிஜமாகியுள்ளது – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர!

Arun Hemachandra 2026.09.17 (1)

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் சுகாதார சேவை தொடர்பான பல பிரச்சினைகள் எழுந்திருந்ததாகவும், சுமார் 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்திலேயே முடங்கிக்கிடந்த திட்டமே இன்று நிஜமாகி வருவதாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர:

“திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் சுகாதார சேவை தொடர்பாக பல சிக்கல்கள் காணப்பட்டன. கடந்த 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்தில் மட்டுமே இருந்த ஒரு திட்டமே இன்று நடைமுறைச் சாத்தியமாகியுள்ளது.

ஜைக்கா (JICA) நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அரைகுறையாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளினாலேயே இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க முடிந்தது. அத்துடன் ஜைக்கா உதவியுடன் இவ்வைத்தியசாலையில் செயல்படுத்தப்படும் இரண்டாவது திட்டம் இதுவாகும்.

கடந்த இரண்டு வருடங்களில் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக பேரழிவுகளுக்குப் பின்னர் பெருந்தொகை பணத்தைச் செலவிட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்திட்டம் திருகோணமலைக்கு மட்டுமன்றி முழு கிழக்கு மாகாணத்திற்கும் பெரும் சேவையை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.”

இந்நிகழ்வில் பிரதேச மதத் தலைவர்கள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, அரச அதிகாரிகள், இலங்கைகளுக்கான ஜப்பான் தூதுவர் Akio Isomata, JICA அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி Shigeo Honzu, வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்