பிரதம நீதியரசருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு எமது கடும் எதிர்ப்பு – சட்டத்தரணி ஹேமக சேனநாயக்க!

Hemaka Senanayake 2026.08.28 (1)

கௌரவ நீதிபதிகளுக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்கமாக பதிலளிக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாத நிலையை சாதகமாகப் பயன்படுத்தி, பிரதம நீதியரசரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் அவதூறுகளுக்கு எமது கடும் எதிர்ப்பையும் கவலையையும் தெரிவித்துக் கொள்வதாக சட்டத்தரணி ஹேமக சேனநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் பிரிவினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:

“கௌரவ நீதிபதிகளுக்கு தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வசதி இல்லை. இந்தச் சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் பிரதம நீதியரசரை இலக்கு வைத்து பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால், எதிர்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் மற்றும் அனைத்து நீதிபதிகளுக்கும் அது பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தீவிர அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் தெரிவித்திருந்தார். அவர்களின் அந்தப் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானவை. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்