அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடொன்றின் உரிமையை வழங்க முடிந்த இன்றைய தினம் மலையக மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான ஒரு நாளாகும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவினால் வீடுகளை இழந்து சுமார் மூன்றரை வருடங்களாக பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:
“இன்றைய தினம் மலையக மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான ஒரு நாளாகும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடொன்றின் உரிமையை வழங்கும் சுப தினமாகும். தற்போதைய அரசாங்கத்தின் மீது மலையக மக்கள் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். இம்மக்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்பட்ட ஒரு சமூகமாவர். 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் எமது மக்களுக்கு ஒரு நல்ல மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, இன்று ‘ஹட்டன் பிரகடனத்தில்’ குறிப்பிடப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வித போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ இன்றி மலையக மக்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் அரசாங்கத்தின் செலவிலேயே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைக்கூற வேண்டும். இது ஆரம்பம் மட்டுமே, இதிலிருந்து இந்த வேலைத்திட்டம் மலையகம் முழுவதும் முன்னோக்கி கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு குடிமகனுக்கும் காணி உரிமையுடன் கூடிய வீடொன்றை வழங்குவோம் என்ற தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்தார்.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் சுசில் ரணசிங்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் குமார ஹென்னாயக்க, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜே. எம். கபில ஜயசேகர உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும், பதில் இந்திய உயர்ஸ்தானிகர் மைத்ரி குல்கர்னி (Maitrey Kulkarni) உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

































