மக்களின் உண்மையான பங்களிப்புடன், அனைவரும் தங்களுக்கான கண்ணியமான வீடொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும், அதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் வசதிகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2026 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் மனித குடியிருப்பு திட்டத்திற்கு அமைவாக “தேவைக்கேற்ப – அனைவருக்கும் நிழல்” எனும் கருப்பொருளில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் இன்று (ஒக்டோபர் 05) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக குடியிருப்பு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, இன்று திறந்து வைக்கப்பட்ட 5,000 வீடுகளில் 5,000 ஆவது வீட்டைத் திறந்து வைத்த பிரதமர், சொத்து உரிமைப் பத்திரங்களை வழங்குதல், குடியிருப்பு திருப்திக் குறியீட்டை வெளியிடுதல் மற்றும் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரை, சித்திர, நடன மற்றும் குறுந்திரைப்படப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
“நாம் அனைவரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும், உண்மையில் ஒரு வீடு என்றால் என்ன என்று. வீடு என்பது வெறும் செங்கற்கள், சிமெந்து, மணல் என்பவற்றைச் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல. வீடு என்பது ஒரு மனிதனின் அடிப்படை மனித உரிமை, கண்ணியம், பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி தங்கியுள்ள அன்பான ஒன்றிணைப்பாகும்.
இதுவரை காலத்தில் எமது நாட்டில் இருந்த அரசாங்கங்கள் ஏதேனும் ஒரு உதவியை வழங்கி, மக்களை வெறும் பயனாளிகளாக மட்டுமே மாற்றிய பாரம்பரிய முறையிலிருந்து எமது அரசாங்கம் முற்றாக விலகுகின்றது. அரசாங்கம் என்பது வழிகாட்டும், தேவையான வசதிகளைச் செய்து தரும் ஒரு தரப்பு மட்டுமே.
மக்களின் உண்மையான பங்களிப்புடன், அனைவரும் தங்களுக்கென ஒரு கண்ணியமான வீடொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தியை வழங்குவதே எமது ஒரே இலக்காகும்.
இந்த நோக்கத்திற்காக, எமது எதிர்கால நிலையான வீடமைப்புப் கொள்கைக்காக 09 அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்ட பல புதிய கொள்கை மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய, வீடமைப்பு என்பதைப் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமையாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளாக அல்லாமல் ஒட்டுமொத்த குடியிருப்பு அமைப்பின் முக்கிய அங்கமாகவும் நாங்கள் கருதுகிறோம். இதற்காக ஒருமைப்படுத்தப்பட்ட நிர்வாக முறையொன்றை நிறுவி, மனித மற்றும் இடஞ்சார்ந்த பண்புகளைக் கருத்திற் கொண்டு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு பிரஜையையும் கைவிடாது, தரவுகளின் அடிப்படையிலான அறிவியல் பூர்வமான வளர்ச்சியை ஏற்படுத்துவதும், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை, உயர்தர நிர்மாணம் மற்றும் பொருளாதாரத்திற்குத் தாங்கக்கூடிய வீடமைப்பு அமைப்பைக் கட்டியெழுப்புவதும் எமது நோக்கமாகும்.
இம்முறை உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், மக்கள் தாங்கள் வாழும் குடியிருப்பு குறித்து எவ்வளவு திருப்தியடைகிறார்கள் என்பதை அறிய “குடியிருப்பு திருப்திக் குறியீடு” (Habitat Satisfaction Index – HSI) எனும் புதிய கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
வீடுகளின் தரம், குடிநீர், சுகாதாரம், சூழல், பாதுகாப்பு மற்றும் பொது வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அளவீடு செய்யப்படும். அதுமட்டுமன்றி, சிறந்த கிராமம், சிறந்த நகர சமூகம், சிறந்த வீடமைப்புத் திட்டம் மற்றும் சிறந்த சுற்றாடல் நட்பு குடியிருப்பைத் தெரிவு செய்வதற்காக “சிறந்த குடியிருப்பு” ஜனாதிபதி விருதை வழங்கவும் முன்மொழிந்துள்ளோம்.
இதற்கு மேலதிகமாக, Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து பயனுள்ள வீட்டுத்தோட்டப் பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு மற்றும் வீட்டுக் கழிவு மேலாண்மைக்காக “பச்சை குடியிருப்பு சவால்” அறிமுகப்படுத்தப்படுவதோடு, குடியிருப்புகளைச் சுற்றி ஒரு மில்லியன் மரங்களை நடும் “One Million Trees for Human Settlements” திட்டமும் தொடக்கி வைக்கப்படுகிறது. தமது அளவிற்கு மீறிய பெரிய மாளிகைகளைக் கட்டி கடனாளி ஆவதை விட, தமது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பொருத்தமான, சுற்றாடலுக்கு இணக்கமான “எனது அழகான சிறிய வீடு” எனும் கருத்தாக்கத்தின் மூலம் எமது எதிர்கால இளைய தலைமுறையினரிடையே புதிய சிந்தனை மாற்றத்தைப் பரப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் “குடியிருப்பு மறுமலர்ச்சி நாள்” எனப் பெயரிட்டு, குறைந்த வசதிகள் கொண்ட நகர்ப்புற குடியிருப்புகளின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. “ஜன திய சம்பத்த” குடிநீர் மறுமலர்ச்சி நாளாக நீர் வசதியற்ற குடியிருப்புகளுக்கு குழாய் நீர் வசதிகளை வழங்குதல் மற்றும் பல சமூக நீர் திட்டங்களைத் திறந்து வைப்பதும் இடம்பெற்றது. மேலும் சமூக சிரமதான பங்களிப்புடன் வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் வடக்கு-கிழக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையை மக்களுக்கு வழங்குவதும் மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க,
“எமது நாட்டில் வீடு இல்லாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக ஒரு வீட்டை வழங்க நாங்கள் கனவு காண்கிறோம். அதற்காக ஒரு நாளுக்குப் பதிலாக ஒரு குடியிருப்பு வாரத்தைப் பெயரிட்டு மிகப்பெரிய அளவிலான பணிகளைச் செய்துள்ளோம்.
அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வீடமைப்புத் திட்டங்களையும் நாங்கள் பாதியில் நிறுத்த இடம் கொடுக்க மாட்டோம். அந்த வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படாமல் கைவிடப்படுவதற்கும் வாய்ப்பில்லை. அந்த வீடுகளில் ஒரு குடும்பம் நிச்சயமாக வசிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டில் நாங்கள் ஆரம்பித்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 30,000 வீடுகளைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அரசாங்கம் ஒரு வீட்டைக் கட்டி முடித்துவிட்டு கைவிட்டு விடாது, பாடசாலை, சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் அவ்வீட்டு உரிமையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத், කළුතර மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.பி. தனுஷ்க ரங்கநாத், பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுது லால் போகஹவத்த, ஐக்கிய நாடுகளின் குடியிருப்பு திட்டத்தின் இலங்கை அலுவலக அதிகாரிகள், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள், பயனாளிகள், சிறுவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.















