எதிர்க்கட்சிகளில் உயர் பதவிகளை வகித்த பல்வேறு செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தற்போது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு முன்வந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தனது விருப்பம் சட்டமாக இருக்கக்கூடாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையை தான் உயர்வாக வரவேற்பதாகவும், நாட்டுக்கு உண்மையான எதிர்க்கட்சியொன்று அவசியப்பட்டுள்ளதாகவும் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தேங்கிக் கிடக்கும் 11 இலட்சம் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்காக நீதித்துறையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்திலும், இதேபோன்று பலர் முன்வந்து அந்த வேலைத்திட்டத்தை ஏற்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம் (12) அக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகியுள்ளார்.