ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எச். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சதாபரணங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளாலும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளாலும் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான ஏர்பஸ் வழக்கினை நிரந்தர முப்பதிகார மேல்நீதிமன்ற நீதிபதி குழாம் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.










