கொழும்பு: ‘சிறிலிய’ நிதி மோசடி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) உறுப்பினரல்லர் என அப்பட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஷிரந்தி ராஜபக்ஷ தமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மட்டுமே என வலியுறுத்தினார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான அரசியல் அதிகாரமிக்க ஒருவராகவே ஷிரந்தி ராஜபக்ஷ இதுவரை செயற்பட்டு வந்திருந்தார்.
இதேவேளை, பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட பலர் தமது கட்சியின் உறுப்பினர்கள் அல்லர் என சாகர காரியவசம் முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷவிற்கும் அதே போன்றதொரு நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







