பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாட்சம்பள விவகாரம் பல வருடங்களாக இழுபறியில் இருந்ததுடன், கடந்த தினத்தில் சம்பள நிர்ணய சபையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (05) வெளியிடப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் சம்பளம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாது என தொழில் அமைச்சு தரப்பு அறிவித்துள்ளது.
அதேவேளை, சம்பள நிர்ணய சபையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டி.பி.விஜயதுங்கவின் ஆட்சியில் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் சம்பள நிர்ணய சபையில் இருந்து வெளியேறி கூட்டு உடன்படிக்கையை கொண்டுவர செயற்பட்டார். அந்த உடன்படிக்கையில் ஏற்கனவே இருந்த சலுகைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதன்படி கூட்டு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மறுபடியும் அதே இ.தொ.கா தொழிற்சங்கம் கூட்டு உடன்படிக்கையில் இருந்து வெளியேறி தற்போது சம்பள நிர்ணய சபைக்குச் சென்றுள்ளது. கூட்டு உடன்படிக்கை இல்லாதுபோவதால் சில தொழற்சங்கங்கள் மனம் நொந்துபோயுள்ளதாக அறிய முடிகிறது.