ஞானசாரர் விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களைச் சந்தோஷப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற கிரியல்லவின் கருத்து அதிகப்பிரசங்கித்தனமானது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களை “சுலுஜாதி” என்றும், பெரும்பான்மை மக்களை “மகாஜாதி” என்றும் அடையாளப்படுத்துவது தவறான அணுகுமுறை எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் கடந்து நாம் முன்னேறிவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் சிறைச்சாலைச் சீருடை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக இருக்கவில்லை எனச் சட்டம் கூறுவதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், அந்த நடைமுறைகளைச் சரிசெய்து தற்போதைய ஜனாதிபதி ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினாலும் தாம் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்களை அரசாங்கமும் பௌத்த பீடங்களும் பார்த்துக்கொள்ளட்டும் எனக் குறிப்பிட்ட அவர், இவை தொடர்பில் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் எனத் தமிழ் பேசும் மக்களிடம் ஏற்கனவே பொறுப்புடன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்கள் இறுதியில் எங்கு சென்று முடியும் என்பது தனது அரசியல் அனுபவத்துக்குத் தெரியும் என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.