சிரானந்தி ராஜபக்ෂவினால் நடாத்திச் செல்லப்பட்ட ‘சிரிலிய சவிய’ அமைப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் சட்டத்தரணியான மனோஜ் கமகே ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
அவர் ஊடக சந்திப்பில் வழங்கிய விளக்கமானது, முன்னைய காலத்தில் கூறப்பட்ட ‘டெய்சி பாட்டியின் மாணிக்கக் கல் மூட்டை’ என்ற கதையை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
அவரது விளக்கத்தின்படி, “கிராமத்து விகாரையில் சைத்தியம் ஒன்றைக் கட்டுவதற்காக தாயக சபை சில நிதிகளைச் சேகரிக்கிறது. ஆனால் யாராவது வந்து அந்த சைத்தியத்தைக் கட்டி முடித்துக் கொடுத்தால், சேகரிக்கப்பட்ட பணம் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. மாறாக, விகாரையின் ஏனைய புண்ணிய காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை திசைதிருப்புவதற்காக இவ்வாறான பல சட்டத்தரணிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சாகர காரியவசம், பிரேமநாத் சி தொலவத்த, உதய கம்மன்பில ஆகியோர் அவர்களில் சிலராவர்.
புற்றுநோய் மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பெற்றுத் தருவதாகக் கூறி அரச மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து பெருந்தொகை நிதியைப் பெற்றுக்கொண்ட சிரானந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று (16) நாட்டை விட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


























