ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழியல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (05) காலை கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழியல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (பரவலாக்கப்பட்ட நிர்வாகம்) கடமையாற்றிய அகில விராஜ் காரியவசம்,
தனது ஊழியர்களுக்காக எனக்கூறி நியமிக்கப்பட்ட 04 ஊழியர்களில் மூவரை தனக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிக்கு அமர்த்தியதாகவும்,
மற்றொரு ஊழியரை பதவிக்குரிய அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தாது, குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் இருபத்தேழு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தாறு ரூபாயும் பதினான்கு சதமும் (ரூ. 2,768,836.14) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக வழங்கச் செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.