உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல் ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,
“எமது பலத்த கோரிக்கைகளின் பின்னர்தான், உயிர்த்த ஞாயிறு விசாரணை குழு அறிக்கை பாராளுமன்றத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பில் எங்களுக்கு பல கேள்விகள் இன்று எழுந்துள்ளன. சஹரான் பயங்கரவாத கும்பல் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பயங்கரவாத கும்பலுக்கும் சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் தொடர்பில்லை என்பது உண்மை.
ஆனால், செய்தவர் பயங்கரவாதி சஹாரான் என்றால், செய்வித்தவர் யார் என்ற பிரதான கேள்வி எழுகிறது.
சஹாரானை தடுக்க, கைது செய்ய தவறி விட்டர்கள். பொறுப்பு கூரலில் தவறி விட்டார்கள். இந்த குற்றசாட்டுகளை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை சுட்டிக்காட்டி விட்டு மட்டும் தப்ப முடியாது. அதற்கு அப்பால் பல உண்மைகள் உள்ளன. அவை வெளியே வர வேண்டும். அவற்றை விசாரியுங்கள்.”