“இலங்கையின் அரசியல் இயக்கங்களில் மிக அதிகமாக அடக்குமுறைக்கும் பீடிப்புக்கும் உள்ளான இயக்கம் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகும். இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் வெவ்வேறு அளவுகளில் எங்களை அடக்கியாண்டுள்ளன. 88 – 89 காலப்பகுதியில் 60,000 பேரும், 71 இல் 10,000 பேரும் கொல்லப்பட்டனர்; சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதனால் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது பழிவாங்குவோம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரி சக்திகள் கூட இந்த அணுகுமுறையைப் பாராட்டியுள்ளன,” என விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மைகள்” எனும் தலைப்பில் கடந்த 06ஆம் திகதி புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த:
அரசியல் கலாச்சார மாற்றம்: “அனுர சகோதரரை இந்நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக்கிய மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 159 நாடாளுமன்ற ஆசனங்களை வழங்கி மக்கள் அரசாங்கத்தை உருவாக்கினர். 76 ஆண்டுகால பழமையான அரசியல் முறையை மாற்றியமைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை அரசாங்கத் தரப்பிலிருந்து முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.”
பழிவாங்கல் இல்லாத ஆட்சி: “இதற்கு முன் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; வீடுகள் கொளுத்தப்பட்டன; வேலைகள் பறிக்கப்பட்டன. நாங்கள் அந்த நிலையை முற்றாக மாற்றினோம். எங்களது தொழிற்சங்கங்கள் கூட எவரையும் அச்சுறுத்தவோ, பலவந்தமாக உறுப்பினர்களாக்கவோ இல்லை.”
அரசு அலுவலகங்களின் நிலை: “பொதுமக்கள் இன்னமும் அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறப்படும் புகார்களுக்கு, ‘எங்களுக்குக் கிடைத்திருப்பது கட்டியெழுப்பப்பட்ட நாடல்ல, அழிக்கப்பட்ட நாடு’ என்பதே பதிலாகும். அதை நாங்கள் தற்போது கட்டியெழுப்பி வருகிறோம்.”
எதிர்காலப் பயணம்: “கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் காட்டிய முன்மாதிரிகளையும் அர்ப்பணிப்புகளையும் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாலும் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றாக எழுச்சி பெறுவோம். சவால்களை எதிர்கொண்டு இறுதி வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.”





