ஸ்வீடன் தேர்தலில் இடதுசாரிகள் முன்னிலையில்!

Magdalena Andersson 2026.09.13 (1)

2026 செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மெக்டலினா ஆண்டர்சனின் (Magdalena Andersson) இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் வெற்றியைக் தடுப்பதற்காக, ஆளும் வலதுசாரிக் கட்சிகள் தீவிர வலதுசாரிகளுடன் இணைந்து பாரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின்படி, வலதுசாரி மற்றும் இடதுசாரி முகாங்களுக்கு இடையே மிகக் குறைந்த சதவீத வித்தியாசமே காணப்படுகின்றது. 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்வீடனில் 08 மில்லியன் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி, இடதுசாரி முன்னணி வெற்றியடையும் அல்லது தீவிர வலதுசாரி ‘ஜனநாயகக் கட்சி’ (SD) அமைச்சுப் பதவிகளுடன் தற்போதைய அரசாங்கத்தில் இணையக்கூடும் எனக் காட்டுகின்றன.

கருத்துக்கணிப்புகளில் சற்று முன்னிலையில் உள்ள மெக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான இடதுசாரி மற்றும் மத்தியசாரிக் கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சி, ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஸ்வீடனில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என பல அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், முன்னாள் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் (Ulf Kristersson) இடதுசாரி அலையைத் தலைகீழாக மாற்றுவதற்காக, இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு அலைகொண்ட ஜிம்மி ஆண்டர்சனின் தீவிர வலதுசாரி SD ஜனநாயகக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறார். எதிர்கால அரசாங்கத்தில் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, இத்தேர்தல் எதிர்பாராத முடிவுகளைக் கொண்டதாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது. ஸ்வீடன் ஊடகங்களின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதையோ அல்லது தீவிர வலதுசாரிகள் அரசாங்கத்தில் நுழைவதையோ காணக்கூடியதாக இருக்கும்.

டொனால்ட் ட்ரம்ப்பின் பிரபல வாசகத்தை எதிரொலிக்கும் வகையில், தற்போதைய பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் வெள்ளிக்கிழமை தெரிவித்தவாறு, “ஸ்வீடனை மீண்டும் மகத்தானதாக்குவதற்காக” தனது வலதுசாரிக் கூட்டணியுடன் ஆட்சியில் நீடிக்க எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். நாட்டின் “குற்ற அலைக்கு எதிரான போராட்டத்தை” தனது தேர்தல் வாக்குறுதியின் மையப் பொருளாக அவர் வைத்துள்ளார்.

இதற்கமைய, அவரது தேர்தல் பிரச்சாரம் பாதுகாப்பு மற்றும் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றுதல் ஆகிய விடயங்களை நேரடியாக முன்னிலைப்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலைத் தொடர்ந்து பல மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், 2022 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் SD கட்சியின் தீவிர வலதுசாரிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப்பட்டது.

மறுபுறம், இடதுசாரி சமூக ஜனநாயக முன்னணியின் மெக்டலினா ஆண்டர்சன், நலன்புரி அரசை மீண்டும் கட்டியெழுப்புதல், சுகாதாரம், கல்வி மற்றும் மக்களின் கொள்வனவுச் சக்தியை அதிகரித்தல் ஆகிய வாக்குறுதிகளுடன் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய கருத்துக்கணிப்புகள் இரு முகாங்களும் மிக நெருக்கமான போட்டியில் இருப்பதைக் காட்டுகின்றன. அண்மைக்கால கருத்துக்கணிப்புகளின்படி, நான்கு இடதுசாரி மற்றும் மத்தியசாரிக் கட்சிகளுக்கு சுமார் 50.8% வாக்குகளும், நான்கு வலதுசாரிக் கட்சிகளுக்கு சுமார் 47.8% வாக்குகளும் கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டின் முன்னணி நாளிதழான Dagens Nyheter நடத்திய IPSOS கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, வலதுசாரிகளுக்கு 49% வாக்குகளும், இடதுசாரிகளுக்கு 49.3% வாக்குகளும் கிடைக்கும் எனவும், இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று தேர்தலை நிறைவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்