இராணுவ உயர் அதிகாரிகளின் மனைவிமார்கள் சிலர் கடந்த கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்து இலங்கைக்கு திரும்பிய நபர்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
படுமோசமாக கொவிட் பெருந்தொற்ற பரவிய 2020-2021 காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பிய இலங்கையர்களை தனிமைப்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்கவைத்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
“அத” சிங்கள பத்திரிகை அதுதொடர்பில் வெளியிட்டிருந்த செய்திப் பதிவு கீழே தரப்பட்டுள்ளது.
“அதேபோல், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பினார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுவொரு கெட்டவேலை. வெளிநாட்டு பணியாளர்கள் எம்முடன் கோபம் கொள்ள, நாட்டுடன் கோபம் கொள்ள, டொலர் அனுப்பாததற்கான பிரதான காரணம்தான் ஹோட்டல்களுக்கு அனுப்பி தனிமைப்படுத்தியமை ஆகும். அங்கு ஒருவரிடம் 14,000 ரூபா வசூலிக்கப்பட்டது என்றால் அதில் 1000 ரூபா ஒவ்வொரு இராணுவ உயர் அதிகாரிகளின் மனைவிமார்களின் கணக்கிலக்கத்திற்கு போய்சேர்ந்தது.”










