“உலகளவில் 2020 ஆம் ஆண்டு மாபெரும் சுற்றாடல் அழிவுக்கும், வன அழிவுக்கும் தலமைத் தாங்கியவர்களில் முதலிடத்தில் இருப்பவர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் “டோசருக்கு எதிரான”, “உயிர்மூச்சைக் காப்பாற்றிக்கொள்ள” என்ற அரசாங்கத்தின் சுற்றாடல் அழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும்,
“எமது நாட்டில் கடந்த வருடமென்பது, பிரித்தானியரின் ஆட்சிக்குப் பின்னர் அரச அனுசரணையுடன், அரசாங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் சுற்றாடல் அழிவுக்கு முகம் கொடுத்த வருடமாகும். உலகளவில் 2020 ஆம் ஆண்டு மாபெரும் சுற்றாடல் அழிவுக்கு, வன அழிவுக்கு தலமைத் தாங்கியவர்களில் முதலிடத்தில் இருப்பவர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இரண்டாவது இடத்தில் இருப்பவர் கோட்டாபாயவின் வர்க்கத்தைச் சேர்ந்த, இனவாதியான பிரேசிலின் ஜனாதிபதி ஜைர் பொல்சனாரோ.
சிங்கராஜ வனம், கொழும்புக்கு அந்த பக்கம் இருக்கும் முத்துராஜவெல கம்பெனிகளுக்கு வழங்கப்படுகின்றன. வெலிகம பிரதேச வனாந்தரங்கள் விற்கப்படுகின்றன. நில்கலே வனத்தில் 62,500 ஏக்கர் தரைமட்டமாக்க பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 100, 50, 15, 10 ஏக்கர் என்று பாரியளவில் சுற்றாடல் அரசாங்கத்தின் அமைச்சர்களின் தலைமையில் அழிக்கப்படுகின்றது.
இதுகுறித்து நாம் மட்டுமல்ல, முத்துராஜவெல வன அழிப்புக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போராடுகிறார். அவரும் சுற்றாடல் தீவிரவாதியா? என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.








