இலங்கையை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அதிகாரிகள் குழுவொன்றும் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு இணையாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையொன்றிலும் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டளவிலும் நாட்டின் பொருளாதாரம் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது என்றால், அரச வருமானத்தில் 82 சதவீதத்தை கடன் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக அரச வருமானத்தில் 1.9 சதவீதம் முதல் 2.4 சதவீதம் வரையான தொகையையே ஒதுக்க முடிந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதிக் குற்றங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,012 பில்லியன் ரூபாயாக இருந்ததாகவும், கடன் தவணைகள் மற்றும் வட்டியைச் செலுத்துவதற்காக மட்டும் 2,998 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடன் தவணைகள் மற்றும் வட்டியைச் செலுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகை, அரசாங்கத்தின் மொத்த வருமானத்தை விட 149 சதவீதமாக இருந்துள்ளது.










