மலையக மக்கள் தோட்டப்பயிர்ச் செய்கை துறையில் ஈடுபட்டு நாட்டின் செழிப்புக்காக தங்களது வியர்வையையும் கண்ணீரையும் சிந்தும் ஒரு சமூகத்தினர் என்றும், கடந்த ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் டொலர்களை ஈட்டித் தந்துள்ளனர் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
2023ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவினால் வீடுகளை இழந்து சுமார் மூன்றரை வருடங்களாக பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:
“அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எமது அமைச்சின் முதலாவது பணியாக இந்த வீட்டுத்திட்டத்தை விரைவாக முடிப்பது தொடர்பில் ஆராய்ந்தோம். அதற்கமைய தேவையான நிதியை ஒதுக்கி, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி மிகக் குறுகிய காலத்தில் உயர்தரத்துடன் வீடுகளைக் கட்டி முடிக்கும் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைத்தோம்.
கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அரைகுறையாக கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்களை எமது அரசாங்கம் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்து வருகிறது. ஆனால், இந்த நவோதயாகம திட்டத்தை மிகக் குறுகிய காலத்தில் முடித்து மக்களிடம் ஒப்படைக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினருக்கு எமது நன்றிகள்.
ஜனாதிபதி அவர்கள் பதவியேற்பதற்கு முன்னர், 2023ஆம் ஆண்டு மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஹட்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹட்டன் பிரகடனத்தை’ வெளியிட்டார். எமது ஆட்சியில் இம்மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என அதில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் அதனை உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். இது வெறும் வீடமைப்பு திட்டம் மட்டுமல்ல, மக்களுக்கு கௌரவத்தையும், உரிமையையும், பாதுகாப்பையும் வழங்கும் ஒரு நிகழ்வாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 734 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள் பதுளை மாவட்டத்தில் 4000க்கும் அதிகமான வீடுகளுக்கான பணிகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்திய நிதியுதவியின் கீழ் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.” எனத் தெரிவித்தார்.

































